Friday, October 24, 2014

திரைகடல் ஓடு என்றாரே திரவியம் தேடு என்றாரே!



திரைகடல் ஓடு என்றாரே
   திரவியம் தேடு  என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
   கண்ணியம் கடமை எனவாழ்வீர்

வையம் தன்னில் வாழ்வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும்  தெளிவாகச்
   செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
   போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
   அன்பால் உலகை வெல்வீரே!

தீதும் நன்றும் பிறர்தம்மால்
   தேடி வாரா! நம்மாலே
நோதலும் தணிதலும் அவ்வாறே
   நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
  இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லா மக்களுக்கும் நலமாமே
   என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
   நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
  பழகிட வேண்டும் அன்பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

Thursday, October 23, 2014

நன்றி! நன்றி! தமிழ்மணத்திற்கு!



உறவுகளே!
வலைப் பதிவுகளை திரட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் தமிழ்மணம் திரட்டியில், கடந்த சில நாட்களாக ஆபாசமான தலைப்புகளில் பதிவுகள் வருவதைக் கண்டு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அதனை மிகவும் பெருந்தன்மையோ ஏற்றுக்
கொண்டு, அப்பதிவுகளை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ளது கண்டு
தமிழ்மண நிர்வாகிகளை பாராட்டி , நன்றியோடு வணங்கி வாழ்த்தினைத் தெரிவித்தும் கொள்கிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்

தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ!



தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும்
தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ
கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா-என்ன
காரணமோ தெரியவில்லை! போதைதரும் மதுவா

மனம்நோகப் பலபேரும் எழுதிவிட்ட பின்பும் –குறை
மாறவில்லை என்றாலே வளராதோ துன்பும்
தினம்போல தவறாது வலையுலகில் வந்தீர் –பதிவைத்
திரட்டுயென தொகுப்பாக முறைப்படித்தித் தந்தீர்

நன்றியதில் மாற்றமில்லை வாழ்த்துகின்றோம் உம்மை-இன்று
நடக்கின்ற முறைகண்டு வருந்துகின்ற எம்மை
என்றும்போல் அரவணைத்து கு(க)றைநீக்க வேண்டும் –நாமே
இணைந்தால்தான் பதிவுலகு வளர்ந்திடுமே யாண்டும்

புலவர் சா இராமாநுசம்

Monday, October 20, 2014

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!


வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே


அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, October 19, 2014

இன்றென் பிறந்த நாளாகும்!



எட்டுப் பத்தொடு இரண்டாகும்-வயது,
இன்றென் பிறந்த நாளாகும்
பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பப்
பட்டே நானும் சுகப்பட்டேன்
தொட்டுத் தாலி கட்டியவள்-நெஞ்சில்
துயரத் தீயை மூட்டுயவள்
விட்டுச் சென்றது ஒன்றேதான்-என்றும்
விலகா வேதனை இன்றேதான்


வையம் தன்னில் வாழ்வாங்கு-நான்
வாழ்ந்த வாழ்வு மனமோங்க
பொய்யும் புரட்டும் இல்லாமல்-பிறர்
புறத்தே எதுவும் சொல்லாமல்
ஐயன் வகுத்த வழியென்றே-முடிந்த
அளவில் நானும் பழியின்றே
செய்யும் பணிகளைச் செய்தேனே-நட்பே
சிறப்பென அன்பைப் பெய்தேனே

சிதலைத் தின்ற ஆல்போல-அடி
சிதைய அந்தோ! நாள்போல
மதலை விழுதே தாங்குமன்றே-பெற்ற
மகளீர் என்னையும் அதுபோன்றே
இதமாய் நாளும் தாங்கிடவே-வற்றா
இளமை மனதில் தேங்கிடவே
பதமாய் நடந்தே வாழ்கின்றேன்-கவிதை
படைப்பதே பணியெனச் சூழ்கின்றேன்

வலையில் கவிதைப் படிப்பவரே-எனை
வாழ்த்திக் கருத்தும் கொடுப்பவரே
அலையில் பட்ட துரும்பாக-ஓர்
ஆலையில் பட்டக் கரும்பாக
நிலையில் மனதும் நிலையாக-பெரும்
நிம்மதி! துயரம் அதுபோக
விலையில் பாசப் பந்தங்களே-உம்மால்
விளைந்தது! நன்றி! சொந்தங்களே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...