மதி!
விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு
   விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
   மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
   கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
   தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!
            தென்றல்!
தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
   தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
  உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
   செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
   தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!
          நினைவு!
கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
   கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
   தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
   சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
   குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை
               புலவர் சா இராமாநுசம்
       
       இனிய உறவுகளே! நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புப் பற்றி
அனைவரும் அறிவீர்கள். எனவே மேலும் இங்கே நான் அதை
போடத் தேவையில்லை எனக் கருதுகிறேன்
ஆனால்
ஒரு முக்கிய( திருத்த) அறிவிப்பு
அக்கூட்டதிற்கு தலைவராக மூத்த பதிவரான சென்னைப் பித்தன்
அவர்கள இருப்பார்கள். நான் முன்னிலை வகிக்கிறேன். அதுதான
முறையானதாகும் சரியானதாகும். இது என் விருப்பம் மட்டுமல்ல
வேண்டுகோளாகும்
அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
     
அனைவரும் அறிவீர்கள். எனவே மேலும் இங்கே நான் அதை
போடத் தேவையில்லை எனக் கருதுகிறேன்
ஆனால்
ஒரு முக்கிய( திருத்த) அறிவிப்பு
அக்கூட்டதிற்கு தலைவராக மூத்த பதிவரான சென்னைப் பித்தன்
அவர்கள இருப்பார்கள். நான் முன்னிலை வகிக்கிறேன். அதுதான
முறையானதாகும் சரியானதாகும். இது என் விருப்பம் மட்டுமல்ல
வேண்டுகோளாகும்
அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
 
 


