Monday, September 3, 2012

விதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்
   சொல்லும் சொற்களில் பொருளில்லை
பந்தம்  பாசம் எல்லாமே-பெரும்
    பணமும் வந்தால் சொல்லாமே
அந்தம் ஆகிடும் அறிவீரே-இந்த
    அவனியில் நடப்பதாம் புரிவீரே
சிந்தனை செய்வீர் மானிடரே-இதை
    செவியில் ஏற்றால் ஏனிடரே

பிறந்த உடனே அழுகின்றோம்-இனி
   பிறவா நிலைதர தொழுகின்றோம்
இறந்தால் மண்ணொடு கலக்கின்றோம்-அது
   இயற்கை என்றே உரைக்கின்றோம்
சிறந்தார் இவரெனச் செப்பிடவே-நம்
   செயலைக் கூறியே ஒப்பிடவே
மறைந்தார் அடடா இன்றென்றே-மக்கள்
    மதிக்க மறைதல் நன்றின்றே


வந்தவர் அனைவரும் போவதுவே-இயற்கை
    வகுத்த நிலையென ஆனதுவே
நிந்தனை பேசிட ஏதுமில்லை-இங்கே
    நிலையென இருப்பவர் எவருமில்லை
சந்தையில் கூடும் கூட்டமென-மனித
    சரித்திரம் கலைந்து ஓட்டமென
மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
    மரணம் வரவும் வீழ்கின்றோம்


இதுதான் வாழ்க்கை இன்றுவரை-இதில்
    ஏற்றமும் தாழ்வும் வருமேமுறை
எதுதான் வாழ்வென அறிவோமே-அதில்
    ஏற்புடை தன்னை ஏற்போமே
மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
   மனமே அவ்வழி விண்டிடவும்
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
   வினையெனச் சொல்லி ஓயாதீர்

                       புலவர் சா இராமாநுசம்


 

31 comments :

 1. வணக்கம் ஐயா அருமையான வாழ்க்கைக்கு உகந்த
  தத்துவத்தை எடுத்துரைக்கும் கவிதைப் பகிர்வுக்கு
  மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 2. எதுதான் வாழ்வென அறியவைக்கும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. ayya!
  anupavangal -
  pakirvukku nantri

  ReplyDelete
 4. அருமையான தத்துவக் கவிதை ஐயா.

  ReplyDelete
 5. சொற்சுவை என்ன !
  பொருட்சுவை என்ன என்ன !!

  தத்துவ முத்துக்களை ஈந்த
  வித்தகர் நீவிர் . வாழ்க ! வாழ்க !!

  சுப்பு ரத்தினம்.
  பி.கு: அனுமதி உண்டு என்றால்
  அக்கணமே பாடிடுவேன்.

  ReplyDelete
 6. சிறப்பான கருத்துக் கவிதை.ஐயா,நானும் என்றாவது கவிதை எழுத முடியுமா?!---சான்ஸே இல்லை!

  ReplyDelete
 7. வாழ்க்கைத் தத்துவ வரிகள்
  சிறப்பு அய்யா

  ReplyDelete
 8. //சந்தையில் கூடும் கூட்டமென-மனித
  சரித்திரம் கலைந்து ஓட்டமென
  மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
  மரணம் வரவும் வீழ்கின்றோம்//

  அற்புதம் ஐயா! உலகியலை அண்மையிலிருந்து பார்த்த அனுபவத்தின் சாரத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்! உண்மை! முற்றிலும் உண்மை!

  ReplyDelete
 9. வாழ்க்கையின் சித்தாந்தங்கள் அடங்கிய இப்பதிவு நெஞ்சில் அப்படியே பதிந்து கொண்டது அய்யா ..
  என் வணக்கங்களும் , நன்றிகளும்

  ReplyDelete
 10. சந்தமும் கருத்தும் அருமை.

  ReplyDelete
 11. சிறப்பான கருத்துக்கள் ஐயா... நன்றி...

  ReplyDelete
 12. மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
  மனமே அவ்வழி விண்டிடவும்
  விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
  வினையெனச் சொல்லி ஓயாதீர்

  விதிக்கு விதி செய்வோம் - இலட்சுமனன்.
  விதியை வெல்ல முடியுமா? - இதுவும் இலட்சுமணன் தான்.

  எதை எடுத்துக் கொள்வது?
  கவிதை யொசிக்கத் துர்ண்டுகிறது புலவர் ஐயா.

  ReplyDelete
 13. நிலையாமை தத்துவம் தங்கள் அழகான தமிழ்க் கவியில் நிலை கொண்டுள்ளது.

  ReplyDelete
 14. ஆஹா எத்தனை அருமையான சொல்லாடல்... அழகிய பாடலாய் பாட தகுந்த கருத்து செறிவுள்ள கவிதை வரிகள் ஐயா... நிலையற்ற இந்த உலகில் சொந்தம் பந்தம் எல்லாமே நம் உடலில் உயிர் இருக்கும் வரை மட்டுமே.. உயிர் உடலில் இருந்து விலகியப்பின்னர் இறந்தவரைப்பார்த்து அப்பா என்றோ அம்மா என்றோ சொல்லாமல் உறவாய் சொல்லி அழைக்காமல் பிணம் என்ற அடைபெயரோடு இருக்கும் இந்த உடலுக்கு சொந்தம் கூட நிலைப்பதில்லை என்று சொன்ன பொருள் மிக மிக அருமை ஐயா... ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக குறைவாய் பேசு.. அதையும் பயனுள்ளதாய் பேசு. என்று சொல்லவைக்கும் பொருளாய் சொல்லும் சொற்களில் பொருளில்லை என்று அழுத்தமாய் சொன்ன வரி சிறப்பு.... பணம பந்தியிலே குணம் குப்பையிலே இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே... பணம் இருப்போரிடம் சொந்தங்களும் உறவு நாடுபவரிட்ம் பாசத்தை கூட கணக்காய் பணமிருக்கும் அளவைப்பார்த்து பெருகும் என்று சொன்னவிதம் மிக அருமை ஐயா... வாழ்க்கையில் இதை எல்லாம் புரிந்து அறிந்து நடந்துக்கொண்டால் இடர் என்பதே நமக்கு இருக்காது என்று பாடம் சொன்னது அசத்தல் ஐயா...


  குழந்தை பிறக்கும் செய்தி அழும் சப்தத்தை வைத்தே கணித்து பெருமகிழ்ச்சி கொள்கிறோம்... நம்மை முழுமையாக்கிய உறவுக்கு மனம் நிறைந்து நன்றி சொல்கிறோம்... அதே குழந்தை வளர்ந்து இந்த உலகில் அல்லல்படும்போது போதும்பா வாழ்ந்தது போதும்பா.. இனி இப்படி ஒரு பிறவி வேண்டவே வேண்டாம் பகவானேன்னு கஷ்டங்கள் நம்மை இறுக்கும்போது கதறி தீர்க்கிறோம்... மண்ணோடு மண்ணாய் மக்கி உரமாகி பூமிக்குள் சேர்கிறோம்... பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பும் உண்டு இது இயற்கைச்சுழற்சி என்றும் சொல்லி நம்மை நாமே சமாதானாமாக்கிக்கொள்கிறோம்...பிறப்பவர் இறப்பது இயற்கை தான் என்றாலும் பிறந்து சாதித்தது என்னவென்று நம் மறைவுக்கு பின்னரும் நம் பெயர் சரித்திரத்தில் நிலைத்திருக்க நல்லவை பேசி அன்பு பகிர்ந்து வம்பு களைந்து நற்காரியங்கள் புரிந்து இறுதிவரை நல்லவராவே மறைந்தார் என்று உலகம் போற்றுமாறு நம் செயல்கள் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவது அற்புதம் ஐயா...


  மனிதனாய் பிறந்து மிருகமாய் குணங்கள் கொண்டு இயந்திரமாய் உழைத்து விதி வந்தால் மரணிக்கிறோம்... நிலையற்ற உலகில் நாம் இல்லையென்றாலும் நம் நல்லவைகள் நிலைத்து நிற்கவும் யாரையும் புறம் பேசாது இனிமையுடன் பேசி எல்லோருடன் மகிழ்ந்து பின் மடிவது சிறப்பு என்று சொல்லும் கருத்து அமைந்த கவிதைவரிகள் அட்டகாசம் ஐயா..

  நமக்கு கிடைக்கும் வாழ்க்கையில் எப்போதும் நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்பி காத்திருக்காமல் ஏற்றங்கள் மட்டுமே கண்டுக்கொண்டிருப்போம் என்று கர்வம் கொண்டிருக்காமல் தாழ்வும் ஏற்படும், அப்படி ஏற்பட்டாலும் அந்நிலையிலும் தன் நிலை பிறழாது நேர்மையுடன் வாழ்ந்து நம் மனசாட்சி சொல்லும் நல்லவைகளை ஏற்று நடந்து... விதி வலிது என்ற மடமையை மறுத்து நமக்கு கிடைக்கும் நல்லவை கெட்டவை எல்லாவற்றுக்கும் நம் செயல்கள் தான் என்று தெரிந்து தெளிவோம் என்று வாழ்க்கை பாடத்தை எளிய பாடல் வரிகளாக்கி எமக்கு விருந்தாய் சுவைக்க தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா.. தங்கள் உடல்நலம் என்றும் சிறக்க இறையிடம் அன்பு பிரார்த்தனைகள் ஐயா...

  ReplyDelete
 15. மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
  மரணம் வரவும் வீழ்கின்றோம்

  அழகு வரிகள்

  ReplyDelete
 16. மிகவும் அருமையான தத்துவ வரிகள்....

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 17. உங்களுக்கு கவிதை மட்டும் தான் எழுத தெரியும், இயல்பான நடையில் / பேச்சு வழக்கில் உரைநடை எழுத தெரியாது என்கிறார் ஒருவர்...என்ன பதில் ?

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...