Friday, February 15, 2013

வான் சிறப்பும் வேண்டுதலும்!



மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா! 

சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. சிறப்பான வரிகள் ஐயா...

    விரைவில் அனைவரையும் குளிர்விக்கட்டும்...

    ReplyDelete
  2. தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்//
    அனைவரையும் குளிர்விக்கட்டும்..

    ReplyDelete
  3. ஐயா ‘’மழையே மழையே வாராயோ” நீங்கள் மழையை அழைத்த நேரம் நல்ல நேரம் போலும். உங்களின் குரல் கேட்டு மழை பெய்யத் தொடங்கிவிட்டது. நன்றி உங்கள் கவிதைக்கு.

    ReplyDelete
  4. ஐயாவின் வரிகளைக் காணவே மழையும் வந்து போனது போல நன்றி ஐயா.

    ReplyDelete
  5. அழகிய கவிதை!
    //விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
    விழைவா ரிடமே பொய்கின்றாய்!//
    அருமையான வரிகள்!!

    ReplyDelete
  6. உங்களின் கவிதையைக் கண்டதும் மழைப் பெய்யதாதா...
    இங்கே விடுவதே இல்லை.

    (இங்கே...நான் கவிதை எழுதுவதால்
    வானமே கண்ணீர் விடுகிறதோ...
    என்று எனக்குள் நினைத்துக்கொள்வேன்
    யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்..
    அப்புறம் நீ கவிதை எழுதாதே
    என்று சண்டைக்கு வந்து விடுவார்கள்.)

    உங்களின் கவிதை அருமை புலவர் ஐயா.
    த.ம. 5

    ReplyDelete
  7. ஐயா!நீங்கள் பாடினீர்கள்;மழை வந்து விட்டது!

    ReplyDelete
  8. அருமையானகவிதை














    ReplyDelete
  9. மழையை வேண்டி கவி பாட இங்கும் வந்தது மழை.

    ReplyDelete
  10. வணக்கம்

    அருமையான கவிதை வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. அருமையான கவிதை வரிகள் ஐயா,

    \\-உற்ற பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா! \\ மழைக்கு விருப்பம் இருக்கும்னு தான் நம்புறேன், பிள்ளைகளான நமக்கு தான் மழை வருவதில் விருப்பம் இல்லை அதனாலதான் மழை வருவதற்கான வழிகளையெல்லாம் அடைத்து விடுகிறோம் (காட்டை அழித்து, சுற்று சுழலை நாசமாக்கி....)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...