Monday, August 29, 2011

பெண்ணே எரிந்து போனாயே

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
    பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
    வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
    கதறி துயரில் விழுகின்றார்
 எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
    எத்தனை உயிர்கள் மாள்வாரே

 வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
      வாழ்வைப் பறிக்கும் கருவாக
 நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
     நீங்கின் மீண்டும் வருமொன்றா
 தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தன்
     தசையைத் தந்தவன் தமிழனடா
 பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
      பற்றி எரியும் திட்டாதீர்

 முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம்
     முடங்கியா விடுவோம் ஆகட்டும்
 அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
     அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
 திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவர்
     தினமும் அறப்போர் தொடுப்பாராம்
 விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
     விடத்தை அவரே தின்பாரா 

 இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே
 குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
    கோழையா நாமே தரைமுட்ட
 கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
    காக்க தமிழரே உடன்ஒல்லை
 துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
    தூக்குக்  கயிற்றை அறுப்பீரே

26 comments :

 1. சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

  ReplyDelete
 2. கண்ணீர் அஞ்சலியோடு நிறுத்திக்கொள்ள முடியாது..
  நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு....

  ReplyDelete
 3. (இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
  இழந்தோம் செங்கொடி வீணாவே) உண்மை வரிகள் மிகச் சரியான வரிகள் .தமிழன் உயிர் குடிக்க பல அரசுகள் ஒன்றாக இயங்கிவருகிறது. அந்த வகையில் எந்த தமிழன் இறந்தாலும் அவர்களுக்கு சந்தோசம் எனவே எந்த தமிழனும் தமது இன் உயிரை இழக்கவேண்டம்.

  ReplyDelete
 4. உணர்ச்சி மிகுதியில் எடுத்த வருத்தும் முடிவு!இது போன்ற நிகழ்வுகளை எப்படித் தடுக்கப் போகிறோம்?
  நெகிழ்ச்சி!

  ReplyDelete
 5. இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
  இழந்தோம் செங்கொடி வீணாவே//
  எமக்கெல்லாம் கண்ணீர் தான் வாழ்வா ஐயா...
  இனிமேலும் இப்படியான தற்கொலைகள் வேண்டாமே.

  ReplyDelete
 6. மனதை பதறவைத்த நிகழ்வு ஐயா பெண் தீக்குளித்ததும் மூவரை இப்படி தூக்கில் போடவேண்டும் என்று அரசு பிடிவாதமாக இருப்பதும்..

  உயிரின் மதிப்பை அறியாதவர்கள் :(

  அறப்போர் தொடங்கட்டும் என்று மனித நேயத்துடன் வரைந்த கவிதை சிறப்பு ஐயா.

  உங்க மனதில் எழுந்த தாக்கமே இங்கே வரிகளாய் அமைந்தது சிறப்பு ஐயா....

  சிறப்பான படைப்புக்கு என் அன்பு வாழ்த்துகள் ஐயா...

  ReplyDelete
 7. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு.

  ReplyDelete
 8. மனதை வலிக்கச் செய்த நிகழ்வு.... உங்கள் உணர்வு கவிதையில் தெரிகிறது....

  ReplyDelete
 9. பாசம் கண்ணை மறைத்துவிட்டதா?
  இது தீர்வாகுமா..?

  அவர் மனம் அமைதியடைவது எப்போது..?
  அவர் உடல் மட்டும் தானே அழிந்திருக்கிறது உள்ளம்..??

  ReplyDelete
 10. கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
  காக்க தமிழரே உடன்ஒல்லை
  துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
  தூக்குக் கயிற்றை அறுப்பீரே

  ......தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 11. நல்ல படைப்பு...சரியான நேரத்தில்...

  ReplyDelete
 12. //இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
  இழந்தோம் செங்கொடி வீணாவே
  குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
  கோழையா நாமே தரைமுட்ட
  கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
  காக்க தமிழரே உடன்ஒல்லை
  துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
  தூக்குக் கயிற்றை அறுப்பீரே//

  உயிரை எடுக்க வேண்டாம் தானே இந்த போராட்டம் சகோதரி.. இதற்காக நீ உயிரை விட்டால் போராட்டம் செய்யும் அனைவருக்கும் மன வருத்தத்தை தராதா... இந்த நாடு உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து செய்தியை வேறு ஒரு பிரச்சனையால் மறைத்து இப்பெரும் தியாகத்திற்கு அர்த்தம்ற்றதாகி விட்டுவிடும்... பாவிகளின் கையில் அதிகாரம் இருக்கும் வரையில் நாம் மேலும் போராட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது எனவே இனியும் சகோதரர்களே சகோதரிகளே உயிரை மாய்க்க வேண்டாம் ஒற்றுமையுடன் போராடுவோம்.... கவிதையின் அவேசம் தொடரட்டும் ஐயா.... நன்றி

  ReplyDelete
 13. ஏன் இப்படிச் செய்தாய்
  என் சகோதரப் பெண்ணே!
  மனம் பேதலித்து
  மரணத்தின் நாவினில்
  நீயாக ஏகினாயே!!
  ஏனிந்த செயல் செய்தாய்
  எம்மை நீ பாவம் ஏற்கச் செய்தாய்!!!
  உன்னுடன் நிற்கட்டும்
  மரணத்தின் லீலைகள்
  அடுத்தொன்று வந்தால் எம்மால்
  தாங்கமுடியாதம்மா!!!

  ReplyDelete
 14. துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
  தூக்குக் கயிற்றை அறுப்பீரே///

  சரியாக சொன்னீர்கள் நண்பரே

  ReplyDelete
 15. வருத்தமான விஷயம்.... அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.... அப்பெண்ணின் கோரிக்கை நிறைவேற துணை இருப்போம்.

  ReplyDelete
 16. ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது ஐயா உங்கள் கவிதை வரிகள்!

  ReplyDelete
 17. ம்ம்ம்ம்...

  இந்த கவிதையை என்னுடைய பஸ்ஸில் பகிர்ந்து கொண்டேன். நன்றி!

  ReplyDelete
 18. வீரம் வளர்க்கையில் விவேகமும்
  சேர்த்து வளர்க்கத் தவறிவிட்டோமா
  நிகழ்வுகளை தங்கள் கவிதையின் மூலமாக
  அறிகையில் அதன் வீச்சு இன்னும் அதிகமாகிப் போகிறது
  மன்ம் இந்தக் கொடுமைக்கு நடுங்குகிறது
  த.ம 17

  ReplyDelete
 19. பல முறை பலரிடம் நான் பகிர்ந்து கொள்ளும் விஷயம் இது. சாதரணமாகவே நாம் உணர்ச்சிகளுக்கு பலியாகிறோம். ஏதும் செய்ய இயலாத நிலையில் உயிர்பலி அவ்வளவு மலிவாகி விட்டது.இதற்கு உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் செய்கைகளும் உசுப்பல்களும் ஓரளவுக்குக் காரணமோ.?

  ReplyDelete
 20.  இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
      இழந்தோம் செங்கொடி வீணாவே
   குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
      கோழையா நாமே தரைமுட்ட
   கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
      காக்க தமிழரே உடன்ஒல்லை
   துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
      தூக்குக்  கயிற்றை அறுப்பீரே

  ஆமைய்யா.. வீணான உயிர்பலியால் அவர்கள் நோக்கம் திசைமாறி விடும் அபாயம் இருக்கிறது..

  ReplyDelete
 21. கவிதை வரிகளில் வருத்தமும் தெரிகிறது, வீரமும் தெரிகிறது.

  ReplyDelete
 22. அதர்மம், எரிக்கப் பிறந்த தமிழ்ப் பெண்ணே
  நீயும் எரிந்து போவதேன்னோ?
  செங்கொடி என்னும் பெயர் தாங்கிய நீயும்
  வெந்தீயில் குளித்தது வேதனையே
  செய்கை அல்லதாயினும் உனது நோக்கம்
  நிறைவேற வேண்டி நிற்கிறோம் அந்தத் தேவனையே!

  வேதனையில் விழைந்த உங்கள் கவிதையும் கருவும்
  என் இதயம் கனக்கச் செய்கிறது ஐயா!

  ReplyDelete
 23. இனி ஒரு மரணம் வேண்டாம் புலவரே!

  ReplyDelete
 24. இனிமேல் உயிர்பலி வேணாவே-
  சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..


  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. கலங்கவைக்கும் கரு சுமந்த ஒரு கண்ணீர்க் கவிதை. சொடுக்கும் வார்த்தை வீச்சுகள் ஒவ்வொன்றும் உரியவரைப் போய்ச் சேரட்டும் நம் உணர்வுகள் மூலமாக!

  ReplyDelete
 26. கீதா said...

  நன்றி கீதா அவர்களே!

  தொடர்ந்து ஊக்கம் தர வேண்டுகிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...