Saturday, August 27, 2011

கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே


 உயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை
    உணராது உறக்கத்தில் விழிகள் மூட
 மயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட
     மறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா
 வயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ
      வந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே
 கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்
      கடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே

 செய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி
     செப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே
 பொய்யாக இருபத்து ஆண்டும் செல்ல-உடன்
      போடுவீரே தூக்கென ஆள்வோர் சொல்ல
 ஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்
     அடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்
 மெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு
    மேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே

 வீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை
      விடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்
 காணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்
     காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
 நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
     நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்
 தூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை
    துரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்

 இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
     இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
 அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்
     அடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற
 கரக்கமலம் குவித்து  உமை  வேண்டுகின்றோம்-உயிர்
     காத்திடுவீர்! கனிவுடனே என்றேமீண்டும்
 உரக்ககுரல் கொடுக்கின்றார் தமிழர்! உண்மை-எனில்
       ஒற்றுமைக்கு உலைவைப்பார் நீரே! திண்மை

          புலவர் சா இராமாநுசம்

27 comments :

 1.  வணக்கமையா இந்த இக்கட்டான நேரத்தில் வந்திருக்கும் இந்த முக்கியமான கவிதை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும்.. பற்றி வாங்கிகொடுத்தால் மரணதண்டனையா?  

  நல்லதே நடக்குமென்று நம்புவோம்..

  ReplyDelete
 2. சிந்தனையைத் தூண்டும் கவிதை.... நல்லது நடக்குமென நம்புவோம்....

  ReplyDelete
 3. (நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
  நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்)அருமை,அருமை ஐயா

  ReplyDelete
 4. //இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
  இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
  அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-//

  அருமையாக் கேட்டிருக்கீங்க..அவங்களுக்கு கேட்குமா?

  ReplyDelete
 5. வணக்கம் அய்யா
  மரண தண்டனை என்பதே நாகரிக உலகில் தேவையற்றது.இவ்விஷயத்தில் அப்பாவிகள் மீது விதிக்கப்படுவது நியாயம் இல்லை.
  நன்றி

  ReplyDelete
 6. சொல்ல வேண்டிய நேரத்தில்
  அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
  புலவரே.

  ReplyDelete
 7. வரிகளில் இருக்கும் வலிமை எம் மனங்களுக்கும் வர வேண்டும்......

  ReplyDelete
 8. மிகவும் தேவையான நேரத்தில் தேவைப்படும் வரிகள்.
  வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 9. வரிகளில் உள்ள வீரம் மக்களிடம் வந்தால் உண்டு!

  ReplyDelete
 10. கவிதையின் ஆவேசம் அவசியமானதே ஐயா

  ReplyDelete
 11. இந்த கவிதையின் லிங்கை எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன் ஐயா...

  http://maayaulagam-4u.blogspot.com/2011/08/blog-post_3522.html

  ReplyDelete
 12. குறுகிய காலத்தில் நிறைவான கவிதையை படைத்து விடுகிறீர்கள் .....அருமை ..

  ReplyDelete
 13. உளம் கனிந்த பாராட்டுகள் தந்தையே உணர்வு அடிப்படையிலான இந்த ஆக்கம் இந்த பாழாய் போன தமிழ் சமூகத்திற்கு நல்ல விடிவை தரும் என எண்ணுகிறேன் தமிழர்கள் எல்லோரும் உணர்வுடன் கூடினால் உண்மையில் மாற்றம் வரும் தமிழினமே ஒன்றகுக.

  ReplyDelete
 14. //காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
  நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
  நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்///

  உணர்ச்சி கொந்தலிக்கும் வரிகள்... இந்நிலை உருவாக வழி வகுக்கிறார்கள் ...

  ReplyDelete
 15. நெஞ்சை உருக்கும் கவிதை வரிகள்
  கல் நெஞ்சங்கள் கரையுமா

  ReplyDelete
 16. மனம் துடிக்கிறது வரிகள் படித்து...

  செய்யாத குற்றத்துக்காக 20 வருடங்கள் தண்டனையே பெரிய தண்டனை... அதுவும் போதாதென்று இப்படி இரக்கமற்று செய்யும் செயலால் இனி இந்தியா தலை நிமிர்ந்து நிற்க வழி இல்லாது போனது :(

  உயிர்களை காக்க தானே தெரியனும் நமக்கு...

  உயிரின் உயர்வை அறியாத மூடர்களின் செயலால் மூன்று உயிர்கள் தவிக்கிறதே :(

  சிறப்பான வரிகளால் சாட்டையடி வரிகள் ஐயா....

  அன்பு வாழ்த்துகள்....

  ReplyDelete
 17. எதிர் காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
  நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
  நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்.////இது,இதைத் தான் செய்யச் சொல்லிக் கேட்கிறார்களோ?

  ReplyDelete
 18. நல்லதே நடக்குமென்று நம்புவோம்.

  ReplyDelete
 19. நல்லது எதுவென்று அவனறிவான். நல்லது நடக்க இறை அருள் கிட்டட்டும்... ஐயா!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. நியாமான கொந்தளிப்பு அனல் கவிதை அய்யா..
  இது சம்மந்தபட்டவருக்கு போய் சேரனும் அதுதான் என் ஆசை, இந்த நியாயம் அவர்களுக்கு உறைக்கனும்.

  ReplyDelete
 21. //வீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை
  விடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்//

  இவை ஜெயலலிதாவுக்கு....
  இந்த மூன்று உயிர்களில்தான் அம்மாவின் "எம் மேல் உள்ள பாசம்" வெளிவரபோகுது.

  ReplyDelete
 22. மரபுக்கவிதைகள் இயற்றுவதில் மன்னன்
  ஐயா நீங்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள
  இந்த அடியாளுக்கு நிறைய விசயங்கள்
  உண்டு.பாராட்டுக்கள் ஐயா .பகிர்வுக்கும்
  மிக்க நன்றி...................................

  ReplyDelete
 23. வணக்கம் ஐயா...
  அந்தரத்தில் தொங்கும் உயிர்களையும், அவற்றினைக் காப்பதற்குத் தமிழகம் எழ வேண்டும் எனும் உணர்வினையும் உங்களின் இக் கவிதை தருகின்றது.

  ReplyDelete
 24. உங்கள் வரிகளின் தாக்கம் அரசை தாக்காதா?

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...