Tuesday, September 20, 2011

படமும் பாடலும்.



            மீள் பதிவு- தொடக்கத்தில் வந்தது


சின்னக் குழைந்தாய் ஏன்வந்தே-இங்கு
சிலைபோல் காணும் நிலைதந்தே
கன்னம் பாதி மறைந்திடவும்-சோகம்
கண்களில் நன்கே நிறைந்திடவும்
தன்னம் தனியே உனைக்காண-மேலும்
தவிப்பும் பயமும் முகம்பூண
என்னுள் நினைவுகள் தாக்கியதே-இதயம்
ஈழம் தன்னை நோக்கியதே

காலில் உனக்கோ செருப்பில்லை-அங்கே
காலொடு கையும் தோளுமில்லை
நாளும் அழிந்தது நமினமே-இங்கே
நம்மைப் பழித்திட நம்மனமே
தோலில் சுரணை வரவில்லை-இந்திய
தேசப் பற்றாம் புரியவில்லை
பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
பார்க்கும் பாவச் சின்னந்தான்

தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
தமிழர் வாழிடம் சுடுகாடே
அலைபோல் அலைந்து உதைபட்டும்-அவன்
அழிய சதைகள் கிழிபட்டும்
கலையாத் தூக்கம் இந்நாட்டில்-கண்டு
காறித் துப்ப வெளிநாட்டில்
நிலையாய் பெற்றோம் பழியேதான்-அது
நீங்கக் காணபோம் வழியேதான்

மடிந்தவர் போக மற்றவரும்-தம்
மனதில் அமைதி அற்றவராய்
விடிந்தால் என்ன நடக்குமெனும்-பெரும்
வேதனை தன்னில் மூழகிமனம்
முள்ளின் வேலி தனிலுள்ளே-அந்தோ
முடங்கிக் கிடப்பார் நிலைசொல்ல
சொல்லில் அடங்கும் ஒன்றல்ல-எடுத்துச்
சொல்ல நடந்ததுநடப்பது ஒன்றல்ல

கதறி அழுதும் வரவில்லை-ஏன்
கண்ணீர் அவரக்கே கண்ணில்லை
பதறி துடித்தும் ஒலியில்லை-ஈனப்
படைகள் கேட்பின் வரும்தொல்லை
சிதறி ஓடிமறைந் தாலும்-அதை
சிங்கள வெறியர் அறிந்தாலும்
குதறி அழிக்க வருவாரே-இந்த
கொடுமை தீர்பார் இனியாரே

18 comments :

  1. மடிந்தவர் போக மற்றவரும்-தம்
    மனதில் அமைதி அற்றவராய்
    விடிந்தால் என்ன நடக்குமெனும்-பெரும்
    வேதனை தன்னில் மூழகிமனம்
    முள்ளின் வேலி தனிலுள்ளே-அந்தோ
    முடங்கிக் கிடப்பார் நிலைசொல்ல
    சொல்லில் அடங்கும் ஒன்றல்ல-எடுத்துச்
    சொல்ல நடந்ததுநடப்பது ஒன்றல்ல

    உண்மையின் தரிசனம் மிக உணர்வுபூர்வமாக
    எழுதியுள்ளீர்கள் .உங்களின் ஆக்கத்தில் எப்போதும்
    ஒரு தனிச் சிறப்பு உள்ளதையா
    பெருமைப்படுகின்றேன் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ......

    ReplyDelete
  2. தோலில் சுரணை வரவில்லை-இந்திய
    தேசப் பற்றாம் புரியவில்லை
    பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
    பார்க்கும் பாவச் சின்னந்தான்//
    இந்த வரிகளை மீண்டும் மீண்டும் என்கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறது ஒருநாடு தனது மக்களை கண்ணே போல காக்கவேண்டும் அப்படி இல்லாமல் போனால் நாட்டை அள்கிரவன் விட்டுவிட்டு ஓடி விடவேண்டும் தனிப்பட்ட மக்களை ஏன் வதைக்க வேண்டும் இவனுங்களுக்கு எவன் அதிகாரம் கொடுக்கிறான் இவனுங்களை ஆதரிக்கிறவன் எப்படிப்பட்ட போக்கிரியாக இருப்பன் நல்ல அரசு நல்ல ஆட்சியமைப்பை கொண்டு இருக்க வேண்டும் .
    மிக சிறந்த ஆக்கம் வணங்குகிறேன் பாராட்டுகள் நன்றி......

    ReplyDelete
  3. படமும் பாடலும் அருமை புலவரே..

    ReplyDelete
  4. தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
    தமிழர் வாழிடம் சுடுகாடே

    இவர்கள் கல்லறையில் எழுதவேண்டும்..

    இவர்களின் அழிவுக்குக் காரணம்


    தாய்மொழிப் பற்று என்று...

    ReplyDelete
  5. அம்பாளடியாள் said...

    வாழ்த்துக்கு நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மாலதி said...


    வாழ்த்துக்கு நன்றி மகளே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. முனைவர்.இரா.குணசீலன்


    வரவுக்கும் வாழ்த்துக்கு நன்றி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. முனைவர்.இரா.குணசீலன் said...


    உண்மைதான் முனைவரே
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா
    கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    வர முடியலை...

    எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

    மன்னிக்க வேண்டும்!

    ReplyDelete
  10. ஈழத்தின் அவலங்களுக்குள்ளே தன் வாழ்வையும் தொலைத்து நிற்கும் பிஞ்சின் நிலையினைக் கமெராக் கண் கொண்டு கவி வடித்துத் தந்துள்ளீர்கள்..

    ReplyDelete
  11. நிரூபன் said...

    பெண் தேடும் அலைச்சலா!

    நன்றி நிரூ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. நிரூபன் said...

    சில மாதங்களுக்கு முன்னால்
    எழுதிய கவிதை

    முதுகு வலி! புதிய கவிதை
    எழுத இயலாத நிலை எனவேதான்
    மீள் பதிவு!நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வணக்கமையா முதுகுவலியை குணப்படித்திவிட்டு வாருங்கள்.. கவிதையில் ஈழத்து சிறுமியை நினைத்த உங்களை நினைத்து பார்கிறேன்..

    தோலில் சுரணை வரவில்லை-இந்திய
    தேசப் பற்றாம் புரியவில்லை
    பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
    பார்க்கும் பாவச் சின்னந்தான்//

    என்னத்தை சொல்ல அதுதான் கவிதையே சொல்லி விட்டதே பகிர்வுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  14. வலி உணர்த்தும் வரிகளை எத்தனை முறை படித்தாலும் வலிதான். இந்த அவலம் மாறும் நாள் என்றோ?

    உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  15. காட்டான் said...

    நன்றி காட்டான் அவர்களே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கீதா said...


    நன்றி கீதா அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அழுத்தமான வரிகள்...வாழ்த்துக்கள் ஐயா

    எனது கண்ணீர் தேசம் கவிதையை படிக்க :
    http://kavithaicorner.wordpress.com/2011/04/27/

    ReplyDelete
  18. விஜயன் said.

    நன்றி விஜயன் அவர்களே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...