Thursday, November 3, 2011

வேண்டாம் அம்மா வேண்டாமே


ஆளும் அம்மா எண்ணுங்கள்-எதையும்
ஆய்ந்து பிறகே பண்ணுங்கள்
நாளும் செய்யும் மாற்றங்கள்-மிக
நன்றா என்பதை சாற்றுங்கள்
பாளு(ழு)ம் நூலகம் செய்திட்ட பெரும்
பாபம் என்ன தூக்கிட்டீர்
தேளும் கொட்டிய நிலைபெற்றோம்
தீயில் விழுந்த நிலையுற்றோம்

வேண்டாம் அம்மா வேண்டாமே-மேலும்
வேதனை தன்னைத் தூண்டாமே
ஆண்டான் செய்தார் என்பதற்கா-அதை
அகற்றுதல் மக்கள் நன்மைக்கா
தூண்டா விளக்காம் நூலகமே-அதை
தூக்கி எறிதல் பாதகமே
ஈண்டார் என்னை எதிர்ப்பதென-வரும்
ஈகோ விடுவீர் வேண்டுகிறோம்

அதற்கென கட்டிய கட்டிடமே-அறிஞர்
அண்ணா பெயரில்! விட்டிடமே
எதற்கென மாற்றுமிவ் முடிவாகும்-இதனால்
என்ன நன்மை விடிவாகும்
இதற்கென எட்டு மாடிகளே-திட்டம்
இட்டே செய்தது பலகோடிகளே
குதர்கமே வேண்டாம் இச்செயலில்-புத்தக
குழந்தைகள் அழியுமிவ் புண்செயலில்

ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
உரிய வசதிகள் கிட்டியதே
ஒன்றை மாற்றி  ஒன்றாக்கின்-அவை
அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்
நன்றா இச்செயல் ஆயுங்கள்-உடன்
நலமுற ஆணையை மாற்றுங்கள்
கன்றாம் மக்களின் தாயாக-உமைக்
கருதிட ஆவன செய்யுங்கள்

மருத்து மனையும் கட்டுங்கள்- அதை
மற்றோர் இடத்தில் கட்டுங்கள்
பொருத்தமே அனைத்தும் உரியதென-உலகு
போற்றிப் புகழ அரியதென
வருத்தமே யாரும் படமாட்டார்-உமை
வாழ்த்தியே துன்பப் படமாட்டார்
திருத்தமே செய்வீர் உடனடியே-முடிவை
திரும்பப் பெறுவீர் அப்படியே

குறிப்பு- மருத்தவர் ஆலோசனை, ஓய்வெடுக்க சொன்ன உங்கள் அன்பு
ஆணை இரண்டையும் மீறி இக் கவிதையை எழுத காரணம் வன் 
செயல் கண்டு கொதித்த உள்ளக் குமுறலே ஆகும்! மன்னிக்க.

31 comments :

 1. //ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
  உரிய வசதிகள் கிட்டியதே
  ஒன்றை மாற்றி ஒன்றாக்கின்-அவை
  அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்//

  ஐயா! இதை விட அழுத்தமாய் சராசரி மனிதனின் குமுறலை வெளிப்படுத்த முடியாது. தமிழனின் ஆதங்கத்தை உங்கள் கவிதை வெளிப்படுத்தியிருக்கிறது.

  ReplyDelete
 2. ஒரு வரலாற்று சின்னம் ஒரு உத்திரவில் அழிப்பட போகிறது...

  ஏன் இந்த சின்ன புத்தி தெரியவில்லை இம்மாவிற்க்கு...

  மருத்துவ மனை வேண்டும் என்றால் அரசால் எத்தனை வேண்டுமானாலும் உடனடியாக கட்ட முடியும் அதை விடுத்து இது போன்ற செயல் அவர்களுக்கு இழிவைத்தான் தரும்...

  இது தற்போதைய பசிக்கு விதை வருத்துன்னும் செயல்தான்...
  விதைகளை அழித்துவிட்டால் அடுத்த விளைச்சல் எப்படி..

  நூலகம் மாற்றுவது எனக்கும் சிறிதளவும் உடன்பாடில்லை...

  ReplyDelete
 3. மருத்து மனையும் கட்டுங்கள்- அதை
  மற்றோர் இடத்தில் கட்டுங்கள்...//

  சரியாக சொன்னீர்கள் ஐயா...
  பழிவாங்குதல் அவரோடு கூடப்பிறந்தது போல...

  உடலைப்பார்த்துக் கொள்ளுங்கள்...

  ReplyDelete
 4. காலத்துக்கேற்ற கருத்துள்ள கவிதை தான். பார்ப்போம்.

  ReplyDelete
 5. ஆதங்கத்தை கவிதையாய் வடித்துவிட்டீர்கள். நூலகம் யாருக்கு என்ன இடைஞ்சல் செய்தது...?! கொஞ்சமும் நியாயம் இல்லாத முடிவு இது...இன்னும் எதை எல்லாம் நாம் சகித்து போகவேண்டுமா தெரியவில்லை.

  ReplyDelete
 6. தங்கள் உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 7. சார், திசை திருப்பும் நடவடிக்கையில் அந்த அம்மா பயங்கர கேட்டியா இருக்காங்க... நம்ம எல்லாத்தையும் பாப்போம்... நீங்க உடலினை உறுதி செய்யுங்கள்

  ReplyDelete
 8. ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
  உரிய வசதிகள் கிட்டியதே
  ஒன்றை மாற்றி ஒன்றாக்கின்-அவை
  அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்// ஒரு சாராரை மனிதனின் குமுறல்..

  ReplyDelete
 9. உண்மை கலைஞரின் பெயர் தாங்கி ஏதும் இருக்க கூடாது என்ற echo மனப்பான்மை ஜெ க்கு நிறைய உண்டு .அதன் விளைவே இது .அருமையான கவிதை

  ReplyDelete
 10. உண்மையான மக்களின் உள்ளத்தின் உணர்வுகளை அருமையாக வெளியே கொண்டு வந்து விட்டீர்கள் புலவரே....!!!

  அமைதியாக ஓய்வெடுத்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 11. உங்கள் பதிவுகளை எங்களுடன் இணையுங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் பிடியுங்கள் பணத்தை..
  மின்னஞ்சல் பதிவு முறையில்....

  ReplyDelete
 12. ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
  உரிய வசதிகள் கிட்டியதே
  ஒன்றை மாற்றி ஒன்றாக்கின்-அவை
  அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்
  நன்றா இச்செயல் ஆயுங்கள்-உடன்
  நலமுற ஆணையை மாற்றுங்கள்
  கன்றாம் மக்களின் தாயாக-உமைக்
  கருதிட ஆவன செய்யுங்கள்....
  அருமையான வரிகள்...
  ஐயா... உரிய வசதிகள் கிட்டினவே என்று வருதல் நோக்குக.

  ReplyDelete
 13. மக்களின் நம்பிக்கைக்கு மாபாதகம் செய்யவா ஒட்டு போட்டோம்?,காழ்ப்புணர்ச்சிக்கு எதையுமே பலிகடா ஆக்குவதா?சாட்டையடி கவிதைக்கு நன்றி.

  ReplyDelete
 14. அம்மாவுக்கு அருமையான அறிவுரைகள் !

  ReplyDelete
 15. அறிவுரைக் கவிதை அருமை

  ReplyDelete
 16. ஏற்றமிகு அறிவுரைகள்
  சேர வேண்டியவரிடம் போய் சேரட்டும்...

  உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள் ஐயா....

  ReplyDelete
 17. ஐயா! உங்களைப்போல பலரும் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்!

  உடல் நலம் கவனித்துக்கொள்ளுங்கள்!

  ReplyDelete
 18. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அருமையான நூலகம் சிக்கிக் கொண்டது, வேதனையுண்டாக்கும் செயல். இதுபோன்ற வேதனைகளைக் கண்டு மனம் குமுறிக் கொண்டிருந்தால் உங்கள் உடல்நிலை தேறுவதெப்போது? உங்கள் நலனையும் கருத்தில் கொள்ளுங்கள் ஐயா.

  ReplyDelete
 19. ஆஹா ...எவ்வளவு நாளாயிற்று? நெல்லைக் கண்ணன் அய்யாவுக்குப்பிறகு தெள்ளு தமிழ் மரபுக்கவிதையை , இன்றைய சூழலுடன் இணைத்துப்படித்து? மிகவும் நன்றாக இருக்கிறது அய்யா!. நான் இரு கட்டுரைகளில் எழுதியதை நீங்கள் ஒரே கவிதையில் உணர்த்தியிருக்கிறீர்கள்.  நன்றி! உங்கள் தமிழ்ப்பணிக்கு!

  ReplyDelete
 20. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. வணக்கம் ஐயா உடம்ப பாருங்க

  ReplyDelete
 22. தங்கள் உடல் நலம் பெற்று மீண்டு வந்தமைக்கு மகிழ்ச்சி புலவரே..

  தங்கள் உள்ளக்குமுறலை அரசு செவிசாய்க்கும் என நம்புவோம்..

  30 நிமிடங்களில் நான் உலவிவந்த வலைத்தளங்களில் இதே செய்தியை 8 வலைப்பதிவர்கள் பதிவு செய்துள்ளார்கள்..

  நல்லதொரு மாற்றத்துக்காகக் காத்திருப்போம்.

  ReplyDelete
 23. மரபு வழியில், அறிவூட்டும் அருமையான கவிதை. நோயுற்ற நேரத்திலும் எழுதியதை நினைக்கப் பெருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 24. ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
  உரிய வசதிகள் கிட்டியதே
  ஒன்றை மாற்றி ஒன்றாக்கின்-அவை
  அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்

  அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. தங்கள் நலத்திற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 26. நன்றென சொன்னீர்
  நயம்பட உரைத்தீர்.
  உள் அகத்தை மாற்றி
  நூல் அகத்தே இருத்தல்
  நயம் என்றீர்.

  நல்லதும் ஏறாது
  நனி தமிழில்
  சொன்னாலும் புரியாது,
  நாளொரு நாடகம்
  நாளும் நடத்திடும்.

  பொருத்தருளா மனமுண்டு
  பொல்லாங்கே செய்திடும்.
  அய்ந்து வருடங்கள் ஆயினும்
  அழிந்து போகுமோ....
  அம்மாவின் இக்குணம்...?

  (ஐயா!, தங்களது கவிதைக் கண்டு இன்புற்றேன். அதைப்போலவே கொஞ்சம் எழுதியும் பார்த்தேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்)
  -அன்புடன் தோழன் மபா.

  ReplyDelete
 27. ஐயா கவிதை அருமை
  தங்கள் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 28. இன்றைய நிலைமைக்கு ஏற்ற கவிதை.நிறையப்பேரின் ஆதங்கம்.நல்லதே நடக்கும்.சுகமாய் இருந்துகொள்ளுங்கள் ஐயா !

  ReplyDelete
 29. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
 30. //ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
  உரிய வசதிகள் கிட்டியதே
  ஒன்றை மாற்றி ஒன்றாக்கின்-அவை
  அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்//

  சாதாரண குடிமகனுக்கு தெரிகிறது. ஆள்பவருக்குத் தெரியவில்லையே!

  அரியணையில் அமர்ந்தால் அறிவு மழுங்கிடும் போல!

  வேலியில் இருக்க வேண்டியதை வேட்டிக்குள் எடுத்து விட்டுக் கொண்டோமே - என இப்பொழுது உறைக்கிறது.

  ReplyDelete
 31. மருத்து மனையும் கட்டுங்கள்- அதை
  மற்றோர் இடத்தில் கட்டுங்கள்...//

  மிக சரியாக சொன்னீர்கள்.. நல்லதை அகற்ற வேண்டாம்... நல்லதையும் செய்யுங்கள்.. வேறு இடத்தில் இடமா இல்லை... பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...