Monday, September 24, 2012

நெறிகெட்ட தமிழினமே! ஒன்றுபடல் உண்டா? நீதியில்லை! நாதியில்லை! நீர்செய்யும் தொண்டா




வான்பொய்பினும் தான்பொய்யாக் காவிரித் தாயே
    வற்றியது கண்ணீரும் வடிந்துவிட நீயே
ஏன்வற்றிப் போனாயோ என்செய்வோம் யாமே
   ஏமாற்றும் கன்னடரோ இரக்கமிலார் ஆமே

தஞ்சைநிலம் எல்லாமே பாலையெனப் போக
   தடமறியா மக்களவர் உள்ளமது வேக
வஞ்சகராய் இருக்கின்றார் வடபுலத்து அரசே
   வக்கற்றுப் போனோமா கொட்டுங்கள் முரசே

புஞ்சைநிலம் ஆயிற்றே தஞ்சைநிலம் இன்றே
   போக்கற்ற மக்களவர் வாழும்வழி என்றே
நெஞ்சமிலா நீசர்களே நீதியில்லை இதுவும்
   நிரந்தரமாய் இவ்வுலகில் வாழ்ந்தில்லை எதுவும்

நெல்லுக்குக் களஞ்சியமே வளம்மிகுந்த தஞ்சை
     நினைத்தாலே வயிரெரிய வாட்டும்துயர் நெஞ்சை
கல்லுக்குள் ஈரமுண்டே கன்னடருக் கில்லை
    கண்டுமிதைக் காணாத வடபுலத்தால் தொல்லை

பாழ்பட்ட அரசியலே பாழ்பட்டுப் போவாய்
     பதவிவெறி கொண்டவரால் பேயெனவே ஆவாய்
வாழ்வற்ற மக்களெலாம்  ஒன்றெனவே சேர்வர்
    வரலாறும் புதியதெனப்  படைத்தவரும் ஓய்வர்

ஓருசொட்டு நீர்கூட தருவதற்கு  இயலா
    ஒன்றுபட்டு அன்னவரும் சொல்லயிங்கும் முயலா
நெறிகெட்ட தமிழினமே!  ஒன்றுபடல் உண்டா?
    நீதியில்லை! நாதியில்லை! நீர்செய்யும் தொண்டா

17 comments :

  1. கவிதையில் நீங்கள் காட்டியுள்ள ஆதங்கம் எம்
    கண்களில் கண்ணீரைக் கசிய வைத்தது !!!!....என்ன ஒரு சொல்லாற்றல் !!!!!.....தங்களிடம் பயில்வதற்கு நிறையவே விசயங்கள் உள்ளதையா .மிக்க நன்றி ஐயா அருமையான படைப்பு இதற்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  2. kothithu vitteerkal. ......ayya!

    ReplyDelete
  3. கவிஞர்கள் பாடல்களுக்கு சக்தி உண்டு என்பதை அறிவேன். உங்கள் குரல் கேட்டாவது தமிழர்கள் ஒன்றிணைந்து போராடி உரிமையை பெற விழைகின்றேன்.

    ReplyDelete
  4. போராட்டத்தோடே காலந்தள்ள வேண்டியுள்ளது தமிழனுக்கு...

    ReplyDelete
  5. தஞ்சைநிலம் எல்லாமே பாலையெனப் போக
    தடமறியா மக்களவர் உள்ளமது வேக
    வஞ்சகராய் இருக்கின்றார் வடபுலத்து அரசே
    வக்கற்றுப் போனோமா கொட்டுங்கள் முரசே..
    மனதை வாட்டி எடுக்கும் வரிகள் ஐயா நடனசபாபதி அவர்கள் கூறியது போல தங்கள் வரிகளுக்கு சக்தி உண்டு ஒன்று படுவார்கள் என்ற நம்பிக்கையில் நானும்.

    ReplyDelete
  6. தமிழினம் ஒன்றிணைந்து போராடினால் விடிவு பிறக்கும். ஆனால் அந்த ஒற்றுமையை ஒருமுகப்படுத்துவோர் யார் என்பதுதான் தெரியவில்லை. ஆதங்கத்தில் விளைந்த உங்களின் கவி எழுப்பிய கேள்வி என்னுள்ளும்!

    ReplyDelete
  7. ஒன்று பட்டிருந்தால் என்றைக்கோ தமிழினம் சிறந்து விளங்கி இருக்கும் அய்யா ..

    ReplyDelete
  8. நெத்தியடியாய் சில வரிகள் ஐயா..
    ஏக்கம்++ஆதங்கம் மிகுந்த கவிதை

    ReplyDelete
  9. பதவிவெறி கொண்டவரால் பேயெனவே ஆவாய்
    அப்போதும் நம்மளை தான் சுற்றுவார்களா? :-)

    ReplyDelete
  10. என்ன சொல்லி என்ன பயன்? அவர்கள் மேட்டில் இருக்க நாம் பள்ளத்தில் நிற்கிறோம். இயற்கையே அவர்களுக்கு பாடம் தர வேண்டும்.

    ReplyDelete
  11. சாட்டையடி வரிகள்... உணர வேண்டியவர்கள் உணர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் ஐயா... நன்றி...

    ReplyDelete
  12. தமிழன் என்றால் சோற்றால் அடித்த பிண்டம் என்ற நினைப்பே அவர்களுக்கு.
    எத்தனை விழிப்புணர்ச்சி பாடல் வந்தாலும் பயன் இருக்குமா?

    Tamil Newspaper

    ReplyDelete
  13. புரட்சி கவிதை....
    அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  14. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே! அருமையான ஆக்கம் ஐயா!

    ReplyDelete
  15. //ஓருசொட்டு நீர்கூட தருவதற்கு இயலா
    ஒன்றுபட்டு அன்னவரும் சொல்லயிங்கும் முயலா
    நெறிகெட்ட தமிழினமே! ஒன்றுபடல் உண்டா?
    நீதியில்லை! நாதியில்லை! நீர்செய்யும் தொண்டா//

    ennaththa solla..!

    ReplyDelete
  16. அருமை சகோ வாழ்த்துக்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...