Thursday, October 11, 2012

மின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண மின்னுயர்வே வாட்டுவது, போதுமம்மா




மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே
     மின்னின்றி சுடுகாடாம் ஆமேஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற
     பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொட்ட
என்செய்வர் மக்களும் அம்மாயம்மா-மேலும்
     அடிமேலே அடியா சும்மாசும்மா!
மின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண
     மின்னுயர்வே வாட்டுவது, போதுமம்மா!

நாதியின்றி வாழ்பவர் நாட்டிலின்றே-இன்று
    நடுத்தர குடும்பங்கள் பாவமன்றே!
வீதியிலே இறங்கிவர இயலாரென்றே-இந்த
    வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர்நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாருமம்மா-அப்
    பாவிகளின் துயரத்தைத் தீருமம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணியமாட்டார்-இரவு
     நிம்மதியும் இல்லாமல் உறங்கமாட்டார்!

பணக்காரர் இதுபற்றி  கவலைகொள்ளார்-இங்கே
    பரமயேழைக்கும் இலவசம்! தொல்லையில்லார்
கணக்காக செலவுதனை திட்டமிட்டும்-மாதக்
     கடைசியிலே கடன்வாங்கித் துயரப்பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப்பலரும்-வாழும்
    பேதைகளாம் நடுத்தரமே! பொழுதாபுலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றாரவரே!-அவர்
    கொதித்தாலே எதிர்வந்து நிற்பாரெவரே!

வெந்துவிட்ட  புண்ணிலே வேலும்பாயா-மேலும்
    வேண்டுமா?முதல்வரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர்நீரே-அந்த
     நோக்காடே தீரவில்லை! இதுவும்வேறே
வந்துவிட்டால் துயர்நீங்க வழியேயில்லை!-எதிர்
    வரலாற்றில் என்றென்றும் பழியேயெல்லை!
கந்துவட்டி மேலாகும் நாளுமுயர்வே-எம்மைக்
    கடங்காரன் ஆக்காதீர் கருணைகாட்டும்!

மௌனம்தான் சம்மதமே என்றார்போல-உங்கள்
    மௌனம்தான் பதிலின்று! நன்றாசால?
கவனந்தான் காட்டுவீர்! உடனேயிதிலே-நிலமை
   கட்டுமீறும் முன்பாக மாற்றமதிலே
சிவனென்றை இனிமேலும் இருத்தல்வேண்டா-மக்கள்
    சினம்தன்னை நனிமேலும் தூண்டவேண்டா
எவனென்ன சொல்வதெனும் எண்ணம்நீங்க-உடன்
   ஏதேனும் செய்வீராம் நாடும்ஓங்க!
    

                        புலவர் சா இராமாநுசம்

குறிப்பு - இன்றைய சூழ்நிலைக்கேற்ப கவிதையில்
         சில சொற்கள் மாற்றப்பட்ட மீளபதிவு!
   

21 comments :

  1. நாம் என்ன புலம்பியென்ன... மின்வெட்டுக்குத் தீர்வு காண எவருக்கும் மனமில்லை. உங்கள் கவிதையின் முதலிரண்டு வரிகளே சுத்தியல் அடி. அருமை ஐயா.

    ReplyDelete
  2. மீள் பதிவாக இருந்தாலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப கவிதையைத் தாங்கி வந்த பதிவுதான்..

    ReplyDelete
  3. //பணக்காரர் இதுபற்றி கவலைகொள்ளார்-இங்கே பரமயேழைக்கும் இலவசம்! தொல்லையில்லார்கணக்காக செலவுதனை திட்டமிட்டும்-மாதக் கடைசியிலே கடன்வாங்கித் துயரப்பட்டும்பிணமாக உயிரோடு நடக்கப்பலரும்-வாழும் பேதைகளாம் நடுத்தரமே! பொழுதாபுலரும்!?குணமென்னும் குன்றேறி நின்றாரவரே!-அவர் கொதித்தாலே எதிர்வந்து நிற்பாரெவரே!//

    -உண்மை. உண்மை. இதுதான் நிதர்சனம். அருமையான கவிதை அய்யா!

    ReplyDelete
  4. இன்றைய இக்கட்டான நிலைக்கு தகுந்த கவி வரிகள் அய்யா ..

    ReplyDelete
  5. சொற்ப நேரம் மின்சாரம் இருந்தாலும் கட்டணம் மட்டும் ஏன் அதிகமாக என்பது மட்டும் புரியவில்லை தக்க நேரத்திற்கான பதிவு ஐயா.

    ReplyDelete
  6. இன்னாளில் மின்சாரம் இல்லாமல்தான்–ஓர்
    இயல்பின்றி வாழ்கின்றார் மக்கள் எல்லாம்
    சொன்னீர்கள் நன்றாகச் சோகந்தன்னை- நாம்
    சொரிகின்ற கண்ணீரின் வேகந்தன்னை

    ReplyDelete
  7. மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே
    மின்னின்றி சுடுகாடாம்

    நன்றாகச் சொன்னீர்கள் புலவரே.

    ReplyDelete
  8. இன்றைய நிலைக்கேற்ற பகிர்வு ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  9. வணக்கமையா நலமா? மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் அடி என்பதை போல், மின் வெட்டும் விலைவாசியும் நடுத்தர மக்களை பாதிப்பதை அழகாக சொல்லி செல்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.!

    ReplyDelete
  10. காலத்திகேற்ற கவிதை ஐயா! வாருங்கள் ஐயா என் வலைப்பக்கம்! நன்றி!

    ReplyDelete
  11. காலத்திற்கேற்ற கவிதை. சென்னையில் பரவாயில்லை. வெளி மாவட்டங்களில் நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை.... கொடுமை!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...