Tuesday, January 29, 2013

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!




ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
              
                    புலவர் சா இராமாநுசம்
      
       

4 comments :

  1. சரியாகச் சொன்னீர்கள்
    சபைக்குச் செல்லாமல் இருப்பதற்கும்
    சபையை நடத்தவிடாமல் இருப்பதற்குமா
    இவர்களுக்கு நாம் வாக்களித்தோம்
    சிந்திக்கச் செய்யும் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உண்மைதான் இப்போது சட்டசபைகள் சத்தசபைகளாகிவிட்டன. என்று இந்த நிலை மாறுமோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
  3. நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
    நன்றா? ஒன்றா? கூறுங்கள்!///சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  4. சரியாக சொன்னீர்கள் ஐயா....

    அருமையான கவிதை....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...