Wednesday, January 30, 2013

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை !


நேற்றே வந்திருக்க வேண்டிய கவிதை தாமதத்திற்கு மன்னிக்க

இன்று நினைவு நாள் அஞ்சலி

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 

ஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்
ஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்
காயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்
காணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே
சாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ
சாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட
வாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது
வரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே

கொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ
குடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்
முத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ
மூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே
செத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு
சேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி
எத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது
எதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ

வீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்
வீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே
தீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு
திசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்
நேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்
நினைத்தபடி தனிஈழப் பரணி பாடி
கூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்
குமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே

இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்
எழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே
அரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்
அனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி
உறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்
உருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்
தருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய
தருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்

அழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்

ஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி       கழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில
கயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்
விழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்
விளைவாக அணிதிரள விரைந்தே வருவார்
செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்

புலவர் சா இராமாநுசம்      


           மீள்பதிவு

7 comments :

  1. உணர்ச்சிப்பூர்வமான கவிதை! விடியல் சீக்கிரம் பிறக்கட்டும்!

    ReplyDelete
  2. கவிதை மனதை உருக்குகிறது..


    அன்புடன்
    அமர்க்களம் கருத்துக்களம்
    தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்
    www.amarkkalam.net

    ReplyDelete
  3. முன்பு படித்த போது எழுந்த அதே வேதனையும், எழுச்சி உணர்வும், ஆதங்கமும் இப்போதும் மனதில் அலை மோதுகிறது ஐயா. உங்கள் தமிழின் மகிமை!

    ReplyDelete
  4. செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
    சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்// உண்மை அய்யா மலரும் மலர்ந்தே தீரும்

    ReplyDelete
  5. நெஞ்சை கனக்க செய்த நிகழ்வு.

    ReplyDelete
  6. மனம் கனத்துப்போகிறது புலவர் ஐயா

    ReplyDelete
  7. மீள்பதிவு என்றாலும்
    மீளாத் துயரத்தைத் தந்த பதிவு!
    த.ம. 6

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...