Monday, June 24, 2013

எதுக்கவிதை என்றிங்கே ஆய்தல் வீணே –அதை எழுதியதும் எவரெனவே ஆய்தல் வீணே!

இதுவரையில்  என்கவிதை  மரபின் வழியே- நான்
   எழுதியது  அனைத்துமே  அன்னை  மொழியே
புதுக்கவிதை  எழுதிவிட முயன்று  பார்த்தேன்-ஆனால்
   புரியவில்லை! வரவில்லை! உள்ளம்  வேர்த்தேன்!
எதுக்கவிதை  என்பதல்ல  எனது  நோக்கம் –நானும்
    எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்!
அதுவெனக்கு வரவில்லை! தோற்றுப்  போனேன்-ஆனால்
    ஆசைமட்டும் அடங்காத  ஒருவன்   ஆனேன்


இன்றில்லை! என்றாலும், வெற்றி பெறுவேன்! –மேலும்
    இயன்றவரை  முயன்றேதான் எழுதித்  தருவேன்
நன்றில்லை எனச்சொல்லி தள்ள மாட்டீர் –என்ற
    நம்பிக்கை  எனக்குண்டே எள்ள மாட்டீர்
கன்றில்லை என்றாலும் பசுவின் பாலை –யாரும்
    கறக்காமல்  விடுவாரா! ? பயணச்  சாலை
ஒன்றில்லை  என்றாலும்  முயலல்  தானே –பணியில்
    ஓய்வுற்ற எனவரையில் அறிவேன்  நானே !


புதுக்கவிதை எழுதுவதும்  புதுமை  என்றே –எனக்குப்
    புலப்படவும், புரிந்திடவும் உணர்ந்தேன்  நன்றே
இதுக்கவிதை எனச்சொல்ல எழுத  வேண்டும் –மேலும்
   எழுதிவிட  நாள்தோறும் நம்மைத் தூண்டும்
மதுக்கவிதை! படிப்போரின்  மனதை  மயக்கும் –என்றும்
    மறவாது !நினைத்தாலே  நெஞ்சம்  வியக்கும்
எதுக்கவிதை  என்றிங்கே   ஆய்தல்  வீணே –அதை
    எழுதியதும்  எவரெனவே  ஆய்தல் வீணே!

                 புலவர் சா இராமாநுசம்

 

31 comments :

 1. ரசிக்க வைக்கும் வரிகள்... படைப்பை மட்டும் ரசிக்க வேண்டும் என்று சொல்லும் ஆக்கம்... வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னீர்கள் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. அதை
  எழுதியதும் எவரெனவே ஆய்தல் வீணே!

  >>
  மிகச்சரியாய் சொன்னீங்க ஐயா! ஆனா, இப்போ எழுதுறாவங்களை பார்த்துதான் எழுத்துக்கே மதிப்பு.

  ReplyDelete
 4. // புதுக்கவிதை எழுதிவிட முயன்று பார்த்தேன்-ஆனால்
  புரியவில்லை! வரவில்லை! உள்ளம் வேர்த்தேன்!
  எதுக்கவிதை என்பதல்ல எனது நோக்கம் –நானும்
  எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்! //

  புலவர் அய்யா! புதுக்கவிதை புனைய நிறையபேர் இருக்கிறார்கள். மரபுக்கவிதை பாடுபவர்கள் உங்களைப் போல் சிலரே. எனவே நீங்கள் கவிதை பாடும் உங்கள் மரபை மாற்ற வேண்டாம்.

  ReplyDelete
 5. அழகாகச் சொன்னீர்கள் ஐயா!...

  கவியில் சொல்லவந்த கருத்தை அழகாகச் சொல்லும்போது அது படிப்பவரைச் சென்றடைந்தால் அதைவிட மகிழ்வேது!
  விடயத்தை விளங்கச் சொல்வதே சிறப்புத்தானே...

  தொடருங்கள் ஐயா!

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

  த ம.3

  ReplyDelete
 6. மன்னிக்கவும்! உங்கள் கவிதையின் தலைப்பில் “எதுக்கவிதை” என்பது
  “எது கவிதை” – என்று இருக்க வேண்டும்.

  ReplyDelete
 7. புலவர் அய்யா
  இனி
  எழுத்தெனும் ஏர்பூட்டி
  கற்பனைக் காளைகளை
  கட்டியிழுத்து....
  க+விதைகளை விதையுங்கள்
  அந்த அவ்வை மூதாட்டிப் போல்
  ஒரு வரியில்...
  இந்த உலகை வெல்லுங்கள்
  வாழ்த்துக்கள்.......பரிதி.முத்துராசன்

  ReplyDelete
 8. புதுக்கவிதை எழுதிடுதல் மிக எளிது ஐயா... மரபில் எழுதுவதே மிகமிகக் கடினமானது. அதை அனாயாசமாகச் செய்கிறீர்கள் தாங்கள். எனவே இதையே தொடருங்கள்! இல்லை அந்த அனுபவமும் வேண்டும் என மனம் நினைத்தால் நிச்சயம் அதுவும் கைகூடிடும் தங்களுக்கு! படிக்கக் காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 9. பால கணேஷ் ஐயா சொன்னது தான் சரி .மரபுக் கவிதை
  எழுதுவது தான் ஐயா சிரமம் தங்களிடம் நாமே கற்றுக்
  கொள்ள ஏராளம் உள்ளது .தொடருங்கள் எக்கவிதையைத்
  தாங்கள் தொடர்ந்தாலும் அக் கவிதையில் பொருள் தரும்
  இன்பம் அது என்றுமே தனிச் சிறப்புடையது தான் .மிக்க
  நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 10. பூக்கள் புதிதாய்ப் பூத்துநின்று
  புலவர் மனத்தைத் தாக்கியதோ?
  ஈக்கள் பலவாய் வந்துமொய்க்க
  இன்பம் அதெனக் கொண்டீரோ?
  பூக்கள் வாசம் சிலநாளே!
  பொங்கும் பெருமை காய்பதுவே!
  பாக்கள் புதிதாய் வந்துபோகும்!
  பழைய மரபே நிலைக்குமன்றோ!!

  பணிவுடன்
  அருணாசெல்வம்.

  ReplyDelete
 11. புதுக் கவிதைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம் அய்யா

  ReplyDelete
 12. மதுக்கவிதை! படிப்போரின் மனதை மயக்கும்....அழகாகச் சொன்னீர்கள் ஐயா!...

  ReplyDelete
 13. மிகச்சரியாய் சொன்னீங்க ஐயா!

  ReplyDelete
 14. எதுக்கவிதை  என்பதல்ல  எனது  நோக்கம் –நானும்
      எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்! ///

  அடடா, என்ன ஒரு வார்த்தை ஜாலம்! அருமை ஐயா!

  ReplyDelete
 15. இன்றில்லை! என்றாலும், வெற்றி பெறுவேன்! –மேலும்
      இயன்றவரை  முயன்றேதான் எழுதித்  தருவேன் ///

  ஐயா, நீங்கள் என்றோ வெறுவிட்டீர்கள்! கவிதையிலும், எங்கள் மனங்களிலும்......!!!

  இனி வெல்வதற்கு இங்கு ஏது உண்டு?
  இதுகாறும் எழுதியது அனைத்தும் நன்று
  கவிதையிலே நீங்களொரு தலைவன் என்று
  கண்டுகொண்டோம் எப்போதோ பெருமை கொண்டு...!

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...