Monday, July 8, 2013

நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?





அணைந்துவிட்ட  சாதித்தீ  மீண்டும்  இன்றே –கொடிய
    ஆலகால விடமாக  மாற  நன்றே!
இணைந்துவிட்ட  காதலர்கள்  பிரிந்தோர்  ஆக –அந்தோ
    இளவரசன்  உயிர்மட்டும்  பறந்து  போக!
நனைந்துவிட  துயராலே பல்லோர் உள்ளம் – இன்றே
    நாடெங்கும்  பாயுதய்ய ! கண்ணீர் வெள்ளம்!
நினைந்திதனை  வருந்துமா ! பாழும் உலகம் –மேலும்
    நீளாது  திருந்துமா  மூளும்  கலகம்!

உண்மையிலே  சாதிதன்னை  ஒழிக்கும்  எண்ணம் –இங்கு
   உருவாக  வில்லையெனில், ! அழிக்கும்!  திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற  நிகழ்வு  எல்லாம்- அதற்கு
   ஆதார  மானதென காட்டும்  சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே  காரணம்  ஆகும் –சாதிப்
    புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே  போகும்!
வண்மைமிகு  சட்டத்தால்  பயனே  இல்லை! –நாளும்
    வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ  எல்லை!

ஓட்டுதனைக்  குறிவைத்தே  சாதி இங்கே – மனித
    உணர்வுகளை  தூண்டிவிடின் ஒழிதல்  எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற  பொம்ம  லாட்டம் –கட்சி
    அரசியலார் அனைவருமே கொள்ளும்  நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென  திட்டம்  போட்டே –அறியா
    ஏழைகளை  ஏமாற்றி  ஓட்டு  கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை  நடக்கும்  ஒன்றே- இதனை
    நம்புகின்ற  மக்கள்தான்  உணர்தல் என்றே!?

                           புலவர்  சா  இராமாநுசம்
    

21 comments :

  1. சாதி உண்மையில் இன்று சாதீ யாகி சுட்டெரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் விளையாட்டில் இதுவும் ஒரு ப‌கடைக்காயாகி விட்ட ஒன்றை வேதனை ததும்ப, விழிப்புணர்வு பெறும் விதமாய் கவியினில் உரைத்திட்டீர்கள். மிக நன்று + மி்க்க நன்றி ஐயா.

    ReplyDelete
  2. உண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு
    உருவாக வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்!///
    நேற்றுவரை இருந்த தமிழுணர்வு நெருப்பில் அழிந்ததால் இன்று மீண்டும் துளிர்கிறது சாதிகக் கலவரம் இதை உடனே அனைக்க வேண்டும்

    ReplyDelete
  3. // ஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா
    ஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே...! //

    உண்மை வரிகள் ஐயா... நல்லதொரு மாற்றம் என்று வரப் போகுதோ...?

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. அருமையான வரிகளில் இந்த சாதீயை சுட்டு பொசுக்கி உள்ளீர்கள் ஐயா.....கண்கள் கலங்குகின்றன.

    ReplyDelete
  5. ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
    உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
    ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி
    அரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்!

    சாதி வெறியை அழகாக சாடியிருக்கிறீர்கள்... இங்கே சாதிதானே தர்பார் நடத்துகிறது.

    ReplyDelete

  6. சாதியெனும் தீயிலே சாகிறர்கள்! இன்றுமெதைச்
    சாதித்தோம்? சாட்டையடி பாட்டு!

    வணங்குகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  7. // ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
    உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!? //

    நன்றாகச் சொன்னீர்கள். இவர்கள் செய்யும் அரசியல் தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  8. ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
    உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?.............


    ஓட்டு கேட்டு வருகையிலே ஓடோட விரட்டினால்
    ஒழித்து விடலாம் இந்த சாதி கட்சிகளை

    ReplyDelete
  9. மனம் பதைபதைக்கிறது அய்யா.
    சாதிகள் இரண்டொழிய வேறில்லை
    என்றானே, என்னவாயிற்று நம்
    சமுதாயத்திற்கு.
    ஒவ்வொரு நாட்டிலும் விஞஞானம் வளர வளர
    நாமோ சாதியை அல்லவா இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றோம்.
    இந்நிலை என்று மாறுமோ?

    ReplyDelete
  10. // ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
    உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?//

    ஓட்டுகளுக்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள்.... சாதரணமாக சாதி வேண்டாம் என நினைத்தாலும் இந்த அரசியல்வியாதிகள் சாதியை விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...