Tuesday, December 10, 2013

எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கனும் தேடியும் காணல்அருமை !



எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கனும் தேடியும் காணல்அருமை !
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும் !
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை !
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் வீணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக !
பொல்லாத விளைவுகள் தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே!
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்புங்கள் அதுதானே எனகுப் பெருமை !

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. நீங்கள் சொன்னதாக யாரிடமும் சொல்லமாட்டேன். சரி தானே அய்யா?

    ReplyDelete

  2. வணக்கம்

    மனித உரிமை மடிந்ததுவே! மண்ணில்
    இனியும் வருமோ இயம்பு?

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. சொல்லும் சொல் நமக்குரிமை...
    அதுவே சொல்லாததை சொன்னதாக
    சொன்னால் அதுவே நமக்கு சிறுமை.
    சொல்லின் ஆற்றல் பெரிது..
    அருமையான கவிதை பெருந்தகையே.

    ReplyDelete
  4. அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லும்
    வார்த்தைகள் மனத்தைக் கொல்லும் மாயைப் பேய்கள் என
    சிந்திக்க வைத்த வரிகள் அருமை ! மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. நானுமதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்
    யதார்த்த நிலை சொல்லும் அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பேனாவின் நாக்கு கத்தியினும் கூர்மை அல்லவா...?

    ஆனால் அது சுரணை உள்ளவர்களைத்தான் தாக்கும் என்பார்கள்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...