Showing posts with label காதல் விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label காதல் விழிப்புணர்வு. Show all posts

Wednesday, February 13, 2013

காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!




கண்ணே  இழந்து  போனாலும்  -வாழக்
     கருதியே  உறுதியாய்  இருந்தவளே!
பெண்ணே  இறந்து  போனாயே  -காமப்
     பேயனால்  இந்நிலை  ஆனாயே!

காதல்  கிறுக்கர்கள்  பெருகிவிட்டார்-இளம்
    கன்னியர்  பலரும்   கருகிவிட்டார்!
வேதனை  நடப்பதே   நாடெங்கும் – கண்ணீர்
   விடுவதா  பெற்றோர்  வீடெங்கும்!

பெற்றே  வளர்த்து  சீராட்டி –கொஞ்சிப்
    பேசியே  நாளும்  பாராட்டி !
 கற்றே  உயர்ந்திடச்   செய்தாரே –இன்று
     கண்ணீர்  மழையெனப்  பெய்தாரே!

அந்தோ இனியவர்   என்செய்வார் –மன
   ஆறுதல்  எவ்வண்  அவரெய்வார்
வெந்தே  சாவது  தலைவிதியா! –மேலும்
   விளம்பிட  வேறு    மதியிலையா!?

இருவர்  மாட்டு  ஏற்படுமே – காதல்
   என்றால்  உண்மை  பொருள்படுமே
ஒருவர்  மாட்டு   தோன்றுவது –என்றும்
    ஒருதலைக்  காதல்  எனப்படுமே!

வேண்டாம்  இந்த  விளையாட்டும் –அதன்
   விளைவை  எடுத்தே  இதுகாட்டும்!
ஈண்டே   இதுவே  முடிவாக – பாடம்
     இளையோர்   கற்றிட  விடிவாக!


               புலவர்  சா  இராமாநுசம்
   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...