Sunday, October 12, 2014

கோடை வெயில் குறைந்தாலும் -அதன் கொடுமைச் சற்றே மறைந்தாலும்!


கோடை வெயில் குறைந்தாலும் -அதன்
கொடுமைச் சற்றே மறைந்தாலும்!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, தெருவில் படுவேகம்-பலர்
நடப்பதைக் காணின் படுசோகம்!


வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
கேள்விக்குக் காலம் பதில்தருமா?

ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
கோழையாய் இருந்தே பலியானோம்!

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. ///கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
    கோழையாய் இருந்தே பலியானோம்!///
    உண்மை ஐயா உண்மை

    ReplyDelete
  2. மனமும் உடலும் வெந்தபடி
    படித்து முடித்தோம் இக்கவியே
    தினமும் தோடரும் இக்கூத்து
    என்று தொலையும் நம்விட்டே

    இயற்கை சூழல் அதைவிடுத்து
    செயற்கை சுகத்தில் வீழ்ந்ததனை
    உணர்ந்து நாமும் தெளிந்தாலே
    உடனே மறையும் இக்கூத்தே

    ReplyDelete
  3. ஆட்சியாளர்களுடன் ஹூத் ஹூத் புயலும் மக்களை வெந்து போகச் செய்கிறது!

    ReplyDelete
  4. வணக்கம் !

    காட்டை அழித்திங்கே கட்டிய கோட்டைகளே
    நாட்டைச் சுடுகாடாய் ஆக்கியது !-வீட்டை
    மறந்து இளைத்த மகாபாவம் வென்றால்
    இறந்தேதான் போவோம் இளைத்து !

    உண்மை நிலையை உணர்வில் கரைத்த அருமையான
    கவிதைப் பகிர்வுக்குத் தலை வணகுகின்றேன் அப்பா !:(

    ReplyDelete
  5. காடு அழிந்தால் நாடு உருப்படாது! நாலு சுவர்களுக்குள் அடங்கிப் போனோம்.....கூண்டுக் கிளியாய் அருமையான வரிகள் ஐயா! நாம் கோழைகள்தான்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...