Wednesday, August 19, 2015

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை



நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!

கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

28 comments :

  1. இன்றைய நிலையை அழகாக அடையாளம் காட்டியது கவிதை

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    உண்மையின் யதார்த்தம் இதுதான் ஐயா அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அனைவரின் மன நிலையை
    அற்புதமான கவியாக்கிவிட்டீர்கள்
    கரு கொடுத்த வருத்தமும்
    கவி கொடுத்த மகிழ்வும்
    இணைந்தே இந்தப் படைப்பு இருப்பதால்
    இது ஒரு பிஃப்டி பிஃப்டி பிஸ்கெட்டின்
    தனிச்ச்சுவை கொண்டதாயிருக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நிறம்மாறும் பச்சோந்தி கட்சிகளே என்பது முற்றிலும் உண்மை :)

    ReplyDelete
  5. கனவுதான் காணவேண்டும் ஐயா. பார்ப்போம்.

    ReplyDelete
  6. நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் ஐயா !மனதில் ஆளப் பதியும் அருமையான வரிகள் கருத்திலும் உண்மை நிலவரத்தை உறுதியாகச் சொல்லி முடித்த விதம் அருமை !மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  7. இவர்கள் திருந்த மாட்டார்கள்.

    ReplyDelete
  8. நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்...ம்ம்ம் கனவுதான் ஐயா....

    ReplyDelete
  9. முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
    முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்
    மிகவும் அருமை ஐயா உண்மையான வரிகள்.
    ஐயா நலம்தானே சென்னை சந்திப்பு பதிவு போட்டு இருக்கிறேன்.
    தமிழ் மணம் இரண்டாவது.

    ReplyDelete
  10. அன்புள்ள அய்யா,

    கொள்கையில்லாதவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது அருமை.

    நன்றி.
    த.ம.9

    ReplyDelete
  11. நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை
    உண்மை ஐயா
    தம +1

    ReplyDelete
  12. அருமை ஐயா,
    ஒரேநிலையான கொள்கை உண்டு அது பதவி ஆசை

    ReplyDelete
  13. அவலங்கள் தொடராமல் இருக்க ஆட்சியாளர்கள் மனம்வைக்க வேண்டும்.

    ReplyDelete
  14. நாற்காலியே கொள்கை
    அருமை ஐயா

    ReplyDelete
  15. இன்றைய நிலையை எடுத்துரைக்கும் கவிதை...
    அருமை ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...