Wednesday, February 17, 2016

படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள் படித்திட தந்தேன் அலைவானில்!



நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ
நினைவுகள்! அதனால் அத்தொல்லை!
மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்
மனதில் குழப்பம் தந்தனவே!
ஆற்ற முயன்றும் இயலவில்லை-ஏனோ
அறவே சற்றும் துயிலவில்லை
காற்றில் பறக்கும் இலைபோல-வீணே
கட்டிலில் புரண்டேன் அலைபோல!


எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
எண்ணத்தில் காட்சித் தந்தார்கள்!
பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
பெருமையே பேசும் சிலபேரை!
சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
பொறுமை இல்லார் சிலபேரை!


எண்ணம் இப்படி சிதறிவிடும்-என்
இதயம் அதனை உதறிவிடும்
வண்ணம் பலவழி முயன்றாலும்-முடிவில்
வந்தது தோல்வியே என்றாலும்
கண்ணை மூடியே கிடந்தேனே-இரவு
காலத்தை அவ்வண் கடந்தேனே!
உண்மை நிலையிது உரைத்தேனே-அந்த
உணர்வினைக் கவிதையில் இறைத்தேனே!

விடிந்தது இருளும் ஓடிவிட-நெஞ்சில்
விளைந்தநல் அனுபவம் பாடிவிட
முடிந்தது வலையில் ஏற்றிவிட-உங்கள்
முன்னே இன்றும் தவழவிட
வடிந்தது வார்த்தையாம் இப்பாலே-நான்
வணங்கும் தாய்த்தமிழ் கவிப்பாலே!
படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
படித்திட தந்தேன் அலைவானில்!

புலவர் சா இராமாநுசம்

26 comments :

  1. மிக அருமை
    நீண்ட இடை வேளையின் பின் சந்திப்பது மகிழ்ச்சி

    ReplyDelete
  2. மிக அருமை
    நீண்ட இடை வேளையின் பின் சந்திப்பது மகிழ்ச்சி

    ReplyDelete
  3. அருமை ஐயா அற்புதமான கோர்வை வரிகள் மிகவும் ரசித்தேன்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. சிலசமயம் நீங்காத நினைவுகள், கவலைகளாய் மாறி தூங்காத இரவுகளைத் தந்து விடுகின்றன. உங்கள் கவிதைகள் உங்கள் எண்ணங்களுக்கு வடிகால்கள்.

    ReplyDelete
  5. உங்கள் எண்ணங்களை எழுத்தில் வடித்த பின் ,துயில் நன்றாக வந்திருக்குமே அய்யா :)

    ReplyDelete
  6. தூங்காத இரவு தந்த கவிதை அருமை ஐயா..

    ReplyDelete
  7. நேற்றுஇரவு உறங்க வில்லை-
    'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது' தெரிந்தது தானே அய்யா அயராத உங்கள் கவிதைகண்டு நான் அசந்துபோகிறேன். தொடர்ந்து எழுதவும், இயங்கவும், உடல்நலம் பேணவும் வாழ்த்தி வணங்குகிறேன் அய்யா.

    ReplyDelete
  8. வயதனாலும் தங்களுக்கு மறதி இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் அய்யா....

    ReplyDelete

  9. எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
    எண்ணத்தில் காட்சித் தந்தார்கள்!
    பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
    பெருமையே பேசும் சிலபேரை!
    சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
    சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
    புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
    பொறுமை இல்லார் சிலபேரை!


    ஐயா தங்களின் தளத்தில் எனது முதல் வருகை.....
    வந்ததும் படித்த வரிகள் இவை.....
    சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைத்தன இவ்வரிகள்...
    அருமை அன்பரே ரசித்தேன் வார்த்தைகளை ருசித்தேன்....

    ReplyDelete
  10. அழகான கற்பனைக்கவிதை ரசித்தேன் ஐயா.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...