Thursday, August 31, 2017

பிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம் மறந்து விடுவேனா மறுபடியும் வருவேனே!நித்தம் ஒருகவிதை  நிலையாக  எழுதிவிட
சித்தம்  இருந்தாலும்  செயல்படுத்த  இயலவில்லை!
முதுமை  முன்னாட   முதுகுவலி பின்னாட
பதுமை  ஆகிவிட்டேன்  பதிவெழுதா  நிலைபட்டேன்!

மோனை  எதுகையென  முறையாக  எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்றுப்  போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு  யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கைப் போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும்  குறைந்துவிட்டார் பலபேரைக்  காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும்   காணவில்லை!
உடலுக்கே  சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே அலைபோல  கவலையிலே  மனமோயா!

மாற்றுவழி  தேடினேன் முகநூலால்  தேற்றினேன்
சாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்!
உம்மை மறபேனா ?  ஓடிவந்தேன் இங்கேயும்
எம்மை  மறந்தாரை  யாம்மறக்க  மாட்டோமால்!

சிந்தனையின்  துளிகளெனச்  சிலவரிகள் எழுதினாலும்
வந்தவர்கள்  பலநூறாம் வருகின்றார்  தினந்தோறும்!
விந்தையதில்  என்னவெனில் விரிவாக  சொல்வதெனில்
சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!

வலைதன்னில்  காணாத  பலபேரும்   அங்கே
நிலைகொண்டு எழுதியே  பெற்றார்கள்  பங்கே
பிறந்த  இடம்விட்டுப்  போனாலும்  உமையெல்லாம்
மறந்து விடுவேனா  மறுபடியும்  வருவேனே!
                       புலவர்  சா  இராமாநுசம்

32 comments :

 1. உண்மைதான் ஐயா.வலைப்பூவே நம் பிறந்த வீடு!

  ReplyDelete
 2. பழைய பிளாக்கர்ஸ் சேர்ந்து தமிழ் பிளாக்கர்ஸ் மாஃபியா எண்டொரு பக்கத்தை முகநூலில் துவக்கியுள்ளனரே, நீங்கள் அதில் இருக்கிறீர்களா? படிப்பவர்கள் எண்ணிக்கைக்கும், பின்னூட்ட எண்ணிக்கைக்கும் என்றுமே சம்பந்தம் இருக்காது. தளராது எழுதும் நீங்கள் எங்களுக்கெல்லாம் முன்னோடி.

  தம முதலாம் வாக்கு.

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா வருவோரின் எண்ணிக்கை குறைந்தது உங்களுக்கு மட்டுமல்ல வலையுலகிற்கே குறைவுதான் இயன்றவரை எழுதுவோம் ஐயா.

  முகநூலைவிட இன்று வாட்ஸ்-அப்பில் மூழ்கி விட்டவர்கள் ஏராளம் ஐயா.

  ஐயா பலமுறை முயன்றும்
  மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
  இப்படியே சொல்கிறது மீண்டும் வருவேன்

  ReplyDelete
 4. காலம் ஒருநாள் மாறும் ,நம் கவலைகள் யாவும் தீரும்:)

  ReplyDelete
 5. பிறந்த வீடு மறக்கவே மறக்காது. அதன் பாசமும் விடாது.
  வருபவர் எண்ணிக்கையை பாராது நம் மன உற்சாகத்திற்கு எழுதுவோம்.

  ReplyDelete
 6. யார் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து கவிதைகளை படையுங்கள் ஐயா. நாங்கள் இருக்கிறோம் படித்து இரசிக்க!

  ReplyDelete
 7. சந்தக்கவிபலவும் சளைக்காமல் எழுதிடுக
  சற்றும் சலிக்காது செந்தமிழில் கவிதருக
  எந்தக் கவிஞருண்டு யாப்பெழுத உம்போல
  எறும்பாய் வந்துதினம் சுவைத்திடுவோம் தேன்போல


  ReplyDelete
 8. வலைப் பூவில் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா
  தங்களின் எழுத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன் ஐயா
  தம +1

  ReplyDelete
 9. பிறந்த வீட்டையும் சுற்றத்தாரையும் மறக்கலாமோ....??

  ReplyDelete
 10. எப்பவும் இந்த வீட்டையும் இங்கு வரும் மக்களையும் மறந்திடாதையுங்கோ.. போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து.. இத்தனை பேர் நம்மோடிருக்கிறார்களே என எண்ணிச் சந்தோசப்பட்டுக்கொள்வோம்.

  ReplyDelete
 11. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...

  ReplyDelete
 12. நொந்த மனத்திலிருந்தும் சந்தம் பிசகாது வந்துவிழும் கவியழகு.. பின்னூட்டமிடாவிடினும் தொடர்ந்து வாசிப்போர் பலருண்டு. இயன்றவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 13. உங்கள் கவிதைகளை தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன். எழுதுங்கள் ஐயா. நாங்கள் இருக்கிறோம்.

  ReplyDelete
 14. வலைப்பதிவர்களுக்காக ஒரு மைய்யம் வேண்டும் என்று நினைத்தவர் நீங்கள் என்றுபடித்த நினைவு இப்போதும் அந்த எண்ணம் உண்டா

  ReplyDelete
 15. எங்க சுத்தினாலும் தேர் நிலைக்கு வந்துதான் ஆகனும்

  ReplyDelete
 16. சந்தம் விளையாடும் கவிதையால் சொந்த நிலை சொன்ன ஐயா..எந்தன் கருத்தும் மற்றோர் போல்தான் - தொடர்ந்து எழுதவும் !

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...