Friday, January 26, 2018

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!



ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!
 
தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?
 
ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!
                                            புலவர்  சா  இராமாநுசம்

3 comments :

  1. மாற்றம் வரும் என்று நம்புவோம்
    குடியரசு தின நல்வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  2. மாற்றம் வரும் நாளுக்காகக் காத்திருப்போம்.

    ReplyDelete
  3. காரியங்களையும், சாதனைகளையும் மறந்த, விடுமுறையை மட்டுமே மனதில் வைத்த நாள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...