Thursday, January 4, 2018

பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம் பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்



தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
        
                        புலவர் சா இராமாநுசம்
 
         கல்லூரியில் படித்த போது எழுதியது

8 comments :

  1. காதல் மிக வயப்பட்டு இருக்கும் போது கவி புனைய வரும் அல்லத்து சோகம்மிக உறும்போதும் கவி தானாய் வரும்

    ReplyDelete
  2. பழைய கவிதையை இரசித்தேன் ஐயா
    த.,ம.1

    ReplyDelete
  3. அருமை. இளமை துள்ளும் கவிதை.

    ReplyDelete
  4. /// கல்லூரியில் படித்த போது எழுதியது//

    அப்பாடா.. நான் ஒருகணம் திடுக்கிட்டு விட்டேன்:)) ஹா ஹா ஹா அழகிய கற்பனை.

    ReplyDelete
  5. கவிதையைப் படித்துக்கொண்டு வரும்போது சற்றே, இல்லை சற்று அதிகமாகவே யோசித்தேன், பொருண்மை வித்தியாசமாக உள்ளதே என்று. ஆனால் கடைசியில் நீங்கள் எழுதியிருந்த கல்லூரியில் படித்தபோது எழுதியது என்பதைக் கண்டவுடன்தான் உணர்ந்தேன்.

    ReplyDelete
  6. ரசித்தேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  7. இளம்மையிலும் சரி..முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றும் சரி..காதலுக்கும் காதல் கவிதைக்கும் சரி எனக்கு எட்டாமலே போய்விட்டது..அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...