Monday, June 20, 2011

மே- பதினெட்டே

              மேதினி போற்றும் மேதினமே-உன்
                 மேன்மைக்கே களங்கம் இத்தினமே
              தேதியே ஆமது பதினெட்டே-ஈழர்
                  தேம்பி அலற திசையெட்டே
               வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
                   வாய்கால் முற்றும சேறாக
               நீதியில் முறையில் கொன்றானே-அந்த
                   நினைவு நாளே துக்கதினம்

               உலகில் உள்ள தமிழரெங்கும்-அன்று
                   ஒன்றாய் கூடி அங்கங்கும்
               அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
                   அமைதியாய்  நெஞ்சில் துயரேந்தி
                வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
                    வருந்த மக்கள் வழியெங்கும்
                திலகம் வீரத் திலகமவர்-உயிர்
                    துறந்த தியாக மறவர்

               முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
                   முடிந்த கதையா அதுவல்ல
               கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்த
                   குடும்பமே அழிந்த நாளன்றோ
               புள்ளி விவரம் ஐ.நாவே-அறிக்கை
                   புகன்றதே நாற்பது ஆயிரமே
               உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
                   உலகத் தமிழர் தொழுகின்றார்

              அகிலம் காணாக் கொடுமையிதே-நாம
                  அறிந்தும் அமைதியா-? மடமையதே
              வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
                  வீரம் விளையாக் களர்நிலமே
              நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
                  நம்தலை தாழும் நிலையுண்டே
              தகுமா நமக்கு அந்நிலையே-மாறும்
                  தமிழகம் பொங்கின் சூழ்நிலையே

                                                புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்த
    குடும்பமே அழிந்த நாளன்றோ
    நெஞ்சம் பதறும் வரிகள்..

    ReplyDelete
  2. இது போன்ற துக்கத்தை எப்படி மறக்க?வலி நிறைந்த வரிகள்.

    ReplyDelete
  3. ஆடிக்கறுப்பு என்றோம்.இப்போ மே 18...தொடருமா இன்னும் நாட்காட்டிகளில் ஈழத்தமிழனின் நினைவுத்தடங்கள் !

    ReplyDelete
  4. // தேம்பி அலற திசையெட்டே
    வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
    வாய்கால் முற்றும சேறாக
    நீதியில் முறையில் கொன்றானே-அந்த
    நினைவு நாளே துக்கதினம்//


    மனதை குத்தி கிழித்த வரிகள் அய்யா
    சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  5. தாய்த் தேச உறவுகளின் எழுச்சி வேண்டிய வலிகளைத் தாங்கிய கவிதைக்கு ஒரு முறை தலை தாழ்த்துகிறேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...