Monday, July 25, 2011

சித்தம் வைப்பீர் ஆள்வோரே

     சின்னப் பையன் வருவானே-தினம்
           செய்தித் தாளும் தருவானே
     சன்னல் வழியும் எறிவானே –கதவு
           சாத்திட குரலும் தருவானே
     இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
           இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா
     என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
           இறைவனை எண்ணி நிந்தித்தேன்

    பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
           பாடம் படிக்கும் வயதன்றோ
    துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
           துரத்த ஓடும் வயதன்றோ
     அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
           அறுத்த செருப்புக் காலோடும்
    தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
           தவறின் திட்டும் பெறுவானே

     சட்டம்  போட்டும் பயன்தருமா-கல்வி
           சமச்சீர் ஆகும் நிலைவருமா
     இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
           ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்
     திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
           தேவைக்கு அதிலே தேடுகின்றார்
     கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
           கொடிகட்டி பறக்குது! நாதியிலே!

     இமயம் முதலாய் குமரிவரை-எங்கும
           இருந்திட வேண்டும் ஒரேமுறை
     நம்மைஆள தேர்தல்முறை-இன்று
           நடைமுறைப் படுத்தும் அந்தமுறை
     அமைய குரலும் தொடுப்பீரே-கல்வி
           ஆணையம் அமைத்து கொடுப்பீரே
     சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
           சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்

     எத்தனை சொல்லியும் என்னநிலை-தினம்
           எண்ணியே பெற்றோர் படும்கவலை
     புத்தகம் எதுவெனத் தெரியவில்லை-பாடம்
           போதிக்க இதுவென அறியவில்லை
     பித்தம் பிடிக்கும் செய்தித்தாள்-இப்படி
           போடும் செய்தி நீடித்தால்
     சித்தம் வைப்பீர் ஆள்வோரே-முடிவு
           செய்திட மக்கள் வாழ்வாரே

19 comments :

 1. // திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
  தேவைக்கு அதிலே தேடுகின்றார்
  கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
  கொடிகட்டி பறக்குது! நாதியிலே!///


  அருமை ஐயா....

  ReplyDelete
 2. நானும் சின்ன பையன்தான்..........

  ReplyDelete
 3. "அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் அன்னயாவினும்
  புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

  என்னும் மகாகவியின் சிந்தனையோடு உங்கள் ஆற்றாமையை
  அருகில் இருந்து உணர்கிறேன்...

  நன்றிகள் புலவரே!

  ReplyDelete
 4. பிள்ளைகள் கல்வியில்லாது வாழும் நிலை வந்துவிடுமோ என்றஞ்சி மனம் பதைத்து வரைந்த வரிகள் மிக சிறப்பு ஐயா... பாரதியின் கோபத்தை ஆதங்கத்தை வரிக்கு வரி காணமுடிகிறது ஐயா.. அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு.

  முத்தான மூன்று முடிச்சு பதிவிட உங்களை அன்புடன் அழைக்கிறேன்...

  ReplyDelete
 5. எளிமையான வரிகளில் எத்தனை ஏக்கமும் தாக்கமும்! அருமை.

  ReplyDelete
 6. ஐரோப்பிய நாடுகள் போல் எம் நாடுகளும் வரவேண்டும் என்று ஒவ்வொரு மனப்பதிவின் போதும் மனம் நெகிழ்ந்து போவேன். நம்மவர் இதை யார் விரும்புவார். சிற்சிலர் வெதும்பி நின்றாலும் இலஞ்சமும் கொள்ளையும் கொள்கையை விரட்டும் போது எத்தனை பாரதி தோன்றினும் எத்தனை இராமாநுசர் போன்றோர் மனங்கலங்கினும் ஆவது யாதொன்றும் இல்லை.

  ReplyDelete
 7. குழந்தைத் தொழிலாளர் குறித்த உங்கள்
  ஆதங்கம் மிகச் சரியானதே
  சட்டங்களும் திட்டங்களும்
  எட்டாத நிலையில்தான் இன்னமும் ஊரும் நாடும் இருக்கு
  தரமான பதிவு

  ReplyDelete
 8. அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் ஒருசேர
  நன்றி!நன்றி! நன்றி!

  உடல் நிலைக் காரணம் தனித்தனி எழுத
  இயலவில்லை! மன்னிக்க!!

  புலவர் சாஇராமாநுசம்

  ReplyDelete
 9. மஞ்சுபாஷிணி said...

  அன்புச் சகோதரி!
  உங்கள் அன்பின் அழைப்புக்கு
  நன்றி! விரைவில் ஆவன செய்வேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. //சித்தம் வைப்பீர் ஆள்வோரே-முடிவு
  செய்திட மக்கள் வாழ்வாரே//
  வைக்க வேண்டுமே?
  சிந்திக்க வைக்கும் கவிதை.

  ReplyDelete
 11. தங்களின் தளம் இன்று தான் தரிசித்தேன். மிகவும் அழகு! கவிகள் அருமை புலவரே !! வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 12. ஐயாவுக்கு வணக்கங்கள்.....
  பாருங்கள் ஐயா  சின்னப்பையன் கவிதைக்கு சின்னவரே வந்திட்டார்.. 

  ஐய்யா எங்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்லத்தேவையில்லை முதலில் உங்கள் உடல் நலத்தை கவணியுங்கோ... 

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 13. எத்தனை சொல்லியும் என்னநிலை-தினம்
  எண்ணியே பெற்றோர் படும்கவலை
  துன்பம் தான்....
  Vetha.Elangathilakam
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 14. நல்ல சிந்தனை...புலவரே..
  விரைவில் தங்கள் உடல் நலம் குணமாகட்டும்...

  Reverie

  ReplyDelete
 15. கல்வி கற்றால் தெளிவுறுவார் - இவர்தம்
  கயமை கண்டு வெகுண்டெழுவார்
  சொல்வதைக் கேட்டு நடப்பாரோ- தாம்
  சுருட்டுதல் கண்டும் இருப்பாரோ
  பலவா றிப்படி யோசித்து - சமச்சீர்
  பாடம் தடுக்குது அரசாங்கம்
  புலவரே நாம்தான் என்செய்வோம் -தினம்
  புலம்பித் தவித்து கவிசெய்வோம்

  ReplyDelete
 16. ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து விட்டீர். இந்தமாதிரி நிலைக்கு நம் கலாச்சாரம் ஒரு காரணம் என்று நான் எழுதியிருந்தேன். சமுதாயத்தின் அங்கங்க்ள் நாம்.பிழைப்பு இழைப்பவரும் நாமே. புலம்புபவரும் நாமே. தனி மனித சீர்கேட்டினால் சமுதாயம் நலிவுற்றதா சமுதாய சீர்கேட்டால் தனிமனிதர் கெட்டனரா. முதல் வந்தது கோழியா, முட்டையா என்பதுபோல் தோன்றினாலும் விழிப்புணர்ச்சியை அவரவர் வீட்டிலிருந்து துவக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் திருந்த வேண்டும். அரசாங்கம் நம்மைப்போல் உள்ளவர்களால் ஆனதுதானே. அரசியலில் ஆதாயம் தேடுவது அரசியல்வாதி மட்டுமல்ல. அவர்களுடன் கூட்டு சேறும் அதிகாரிகளும் பணியாளர்களுமே. அதாவது நம்மைப் போன்றவரே. நாம் என்ன செய்ய. ?எழுதுவோம் . திருந்துவோம். திருத்துவோம்.

  ReplyDelete
 17. ஆளும் வர்க்கத்தின் பாராமுகத்தால், அல்லறும் ஏழைகளின் வாழ்வினைப் பற்றிய, மனதில் ஏன் இந்த நிலமை என எண்ணி வருத்தமுறக் கூடிய ஒரு கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  ஆட்சியாளர்கள் நினைத்தால் வறுமையினை ஒழிக்க முடியாதா எனும் கேள்வி இக் கவிதையின் பின்னே தொக்கி நிற்கிறது ஐயா.

  ReplyDelete
 18. அன்பு நெஞ்சங்களே!
  நன்றி மறப்பது நன்றல்ல-என்பதை வகுப்பறையில்,பாடமாக சொல்லிய புலவன்
  நான், இங்கே உங்கள் அனைவருக்கும், தனித்தனியாக நன்றி சொல்ல, தற்போதைய
  உடல்நிலை(முதுகுவலி)இடம் தரவில்லை
  மன்னிக்க!
  ஆனால் உங்கள் பதிவுகளைக்
  கண்டு கருத்துரைகளை உறுதியாக (சற்று முன பின்)
  பதிவு செய்வேன்

  உண்ணும் உணவைவிட, உட்கொள்ளும்
  மருந்தைவிட என்னை வாழ வைத்துக் கொண்
  டிருப்பது உங்கள்பதிவும், மறுமொழிகளுமே
  ஆகும் என்பதே உண்மை!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...