Tuesday, August 16, 2011

காந்தியம்

காந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில
கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட
ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே
இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட
சாந்தியம் மட்டுமே நெஞ்சில்கொண்டே-அவர்
சாதித்த வெற்றிகளை மக்கள்கண்டே
காந்தியின் பெயரோடு மகான் என்றே-பட்டம்
மனமுவந்து வைத்தாராம் போற்றியன்றே

உப்புக்கும் வழியின்றி அடிமை யாக-நம்
உரிமைக்குப் போராடி கொடுமைபோக
செப்பியவர் மொழி கேட்டே மக்கள் -தாமே
சென்றனரே வெள்ளமென உண்மையாமே
ஒப்பிடவும் அவர்போல ஒருவர் உண்டா-இவ்
உலகத்தில் இன்றுவரை சொல்வீர் கண்டால்
தப்புதனைச் செய்தாலும் ஒத்துகொள்ளும்-அவர்
தனிப்பிறவி காந்தியென உலகம் சொல்லும்

பாடுபட்டுச் சுதந்திரத்தை பெற்றார் அவரே-பின்
பதவிதனை மறுத்தவரும் இவரே இவரே
கேடுகெட்டுப் போனதந்தோ நாடுமின்றே-பதவி
கேட்டுபேரம் பேசுவதா நொந்தோம்நன்றே
கூடுவிட்டுக் கூடுபாயும் தன்மைபோல-கட்சி
கொள்கைதனை கைவிட்டு நாளுமாள
ஓடுகின்ற காட்சிபல கண்டோ மிங்கே-இனி
உருப்படுமா இந்நாடு வழிதான் எங்கே

கத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்
கைகளிலே அகிம்சையெனும் கொள்கைஏந்தி
புத்திகெட்டு நாமதனை அழித்தே விடுவோம்-நல்
போக்கற்று நோக்கற்றால் நாமேகெடுவோம்
சுத்திவந்து தொடுவதில்லை யாரும் மூக்கை
சொல்வதென்ன இனியேனும் உமதுவாக்கை
சத்தமின்றி நல்லவர்கே அளிக்க வேண்டும்-நல்
சரித்திரமே உருவாகி களிக்க யாண்டும்

புலவர் சா இராமாநுசம்

22 comments :

  1. காந்தியம் அருமை புலவரே...இருமுறை படித்தேன்..சுவை கூடியது...

    ReplyDelete
  2. அருமையான கவிதை...

    ReplyDelete
  3. ரூபாய் நோட்டிலும் காந்தி படம் இல்லாதிருந்தால் இந்நேரம் அவரை மக்கள் மறந்திருப்பார்கள் கவிஞரே..

    மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  4. காந்தியம் கவிதை அருமையா இருக்கு.ரசிச்சு படிக்க,
    படிக்க சுவாரசியம்.

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான கவிதையை வாசித்த நிறைவு மனதில்....அருமையாக இருக்கு சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. உங்கள் கவிதை படிக்கையில் இயற்றமிழின் சுவையை உணர முடிகிறது.
    மேலும் காந்தியத்தின் நிலைப்பாட்டை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
    காந்தியம் காப்போம்

    ReplyDelete
  7. கத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்
    கைகளிலே அகிம்சையெனும் கொள்கைஏந்தி
    ஆம் இன்று அகிம்சை சக்தி போய்விட்டதா
    நாட்டின் பிரதமர் உண்ணாவிரதத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறுகிறார்

    ReplyDelete
  8. காந்தி என்பது சரித்திரப் பாடத்தோடும்
    சாந்தி என்பது எல்லோருடைய கனவுகளோடும் என
    ஆகிப்போகுமோ என பயமாய் இருக்கிறது
    ஊழலில் உலக சாதனைபடைத்தவரையும்
    ஊழலுக்கு எதிராக போராடுபவரையும்
    ஒரே ஜெயிலில் அடைத்து சாதனைப்படைக்கும்
    நம் அரசை நினைக்க நினைக்க
    பாராளுமன்ற ஜன நாயகத்தில் மக்கள்
    நம்பிக்கை இழந்துவிடுவார்களோ என
    அச்சமாக உள்ளது
    காரிருளில் ஒரு சிறு கைவிளக்குபோல
    உங்கள் கவிதை நம்பிக்கை ஊட்டிப்போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. காந்தி மகானைப் பற்றிய அருமையான கவிதை..

    ReplyDelete
  10. சொல்வதென்ன இனியேனும் உமதுவாக்கை
    சத்தமின்றி நல்லவர்கே அளிக்க வேண்டும்-நல்
    சரித்திரமே உருவாகி களிக்க யாண்டும் //

    யாண்டும் வேண்டும்.

    ReplyDelete
  11. ஐயா உங்கள் வரிகள் அருமை...........

    ReplyDelete
  12. ’காந்தி’யைப்பற்றி மனச்
    ‘சாந்தி’அளிக்கும் கவிதை.
    அருமை, அருமை.

    ReplyDelete
  13. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  14. சத்திய சோதனையைத் தந்த சத்தியத்தின் செல்ல மகன் அவர். சாகா புகழ் பெற்ற அவரின் சமதர்ம விளக்கொளி என்றும் இந்த உலகிற்கே கலங்கரை விளக்காக விளங்கும்.

    அமெரிக்க முதல் மகனே அவரை போற்றும் இந்நாளில்.... ஏனோ? இந்த அவலம் அவர் பிறந்த நாட்டில்...

    அருமையானக் கவிதை ஐயா! நன்றி.

    ReplyDelete
  15. காந்தியம் சாகாது.உங்கள் கவிதை போல் வென்று நிற்கும்!

    ReplyDelete
  16. சுதந்திரம் பற்றிய அருமையான கவிதை ஐயா,

    ReplyDelete
  17. வணக்கமையா அருமையான கவிதை...
    கத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம் 
    கைகளிலே அகிம்சையெனும் கொள்கைஏந்தி 
    புத்திகெட்டு நாமதனை அழித்தே விடுவோம்-நல் 
    போக்கற்று நோக்கற்றால் நாமேகெடுவோம் 

    எப்போது நாம் திருந்தப்போகிறோம்..!!!!!?????


    காட்டான் குழ போட்டான்....

    ReplyDelete
  18. காந்தியம் கலக்கல் கவிதை ஐயா

    ReplyDelete
  19. மஹாத்மாவிற்கு இதையும் விட இந்த சுதந்திர நாளில் அருமையான சமர்ப்பணம் இருக்க முடியாது!! அருமையான கவிதை!!

    ReplyDelete
  20. சிறப்பான வரிகளால் மஹாத்மாவை போற்றி வரைந்த கவிதை ஐயா....

    முடியாது என்ற சொல்லை அஹிம்சையால் தகர்த்தெறிந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்ததோடு மட்டுமில்லாமல் அதே நாட்டில் தன் உயிரையும் பலியாக கொடுத்தார் அண்ணல்...

    அன்பையும் அஹிம்சையும் போதித்தவருக்கு கிடைத்ததோ :(

    அண்ணலின் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவை எத்தனையோ உண்டு என்று உணர்த்திய மிக உன்னத கவிதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அற்புதமான கவிதை
    அருமையான விளக்கம்!
    பயன் என்ன ஐயா?
    இளைஞன் உணர்ந்தாலும்
    இன்றைக்கு நிலை என்ன?

    உணவு முதல்
    உறக்கம் வரை!
    ஆங்கிலம் மட்டுமே!!

    சிறு சந்தேகம்..
    நம் இந்தியாவிற்கு
    சுதந்திரம் கிடைத்துவிட்டதா?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...