Tuesday, August 23, 2011

குப்பையை அகற்ற வேண்டாமா

எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

22 comments :

 1. நன்றாகச் சொன்னீர்கள் புலவரே.

  எங்கெங்கு காணினும் குப்பைதான்!
  அதிலும் அதிகம் தெரிவது ஞெகிழி (பிளாஸ்டிக்) தான் புலவரே..

  ReplyDelete
 2. பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
  பரவிக் கிடப்பது பெருந்தொல்லை

  அரசை மட்டுமே குற்றம் சுமத்துவதில்
  பொருளில்லை!!

  நினைத்த இடத்தில் குப்பை போடுவதா சுதந்திரம்..?

  நம் வீடு போன்றதே நாடு என்ற எண்ணத்தில்

  குப்பைத் தொட்டி சென்று தேடி அதில் குப்பைபோடும் வழக்கம் எத்தனை பேருக்கு உள்ளது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது...????????

  ReplyDelete
  Replies
  1. மிகவும் யதார்த்தமான வரிகள்
   குப்பைத் தொட்டி சென்று தேடி அதில் குப்பைபோடும் வழக்கம் எத்தனை பேருக்கு உள்ளது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது...????????

   Delete
 3. அருமையான கவிதை
  உண்மையை பளிச்சுன்னு சொல்லீடீங்க

  நாமெல்லாம் இந்தியர் அல்லோ

  காரை சுத்தமாய் கழுவி முடித்த பின்
  காறி ரோட்டில் எச்சில் துப்போவோர்
  இங்கே உண்டு

  வீட்டை சுத்தம் செய்து
  ரோட்டை குப்பை ஆக்கும் கூட்டம்
  இங்கே உண்டு

  அவ்வளவு தான் நம்ம பொதுநலம் என்ன செய்ய!!??

  ReplyDelete
 4. மிக அருமையான மென்மையான அறிவுரை கவிதை ஐயா....

  வரிகளில் ஆதங்கம் நாம் வாழும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொண்டாலே எழில் கொஞ்சுமே....

  நம் வீட்டை சுத்தமா வெச்சுக்க நினைச்சு குப்பையை கொண்டு போய் வெளியே ஒழுங்கா குப்பைத்தொட்டியில் கொட்டாம தெருவில் கொட்டிவிட்டு ஓடி வந்துவிடுவோம்.. எதிர்வீடு பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வந்துட்டால்?

  நம் மனசை சுத்தமா வெச்சுக்கணும்...

  நம் உடலை சுத்தமா வெச்சுக்கணும்...

  நம் வீட்டைச்சுத்தமா வெச்சுக்கணும்...

  நம் தெருவையும் சுத்தமா வெச்சுக்கணும்....

  நம் ஊரையும் சுத்தமா வெச்சுக்கணும்....

  நமக்கென்னாச்சுன்னு நைசா வாழைப்பழம் சாப்பிட்டு தோல் போடும் கும்பலை இப்பவும் நான் பார்ப்பதுண்டு...

  எனக்கென்ன என்று வெற்றிலை எச்சிலை துப்புவதுண்டு...

  சிகரெட் துண்டை அணைக்காமல் வீசி எறிவதுமுண்டு...

  நம்மில் இருந்து ஆரம்பிப்போமே....

  போடும் கழிவுகளை குப்பைத்தொட்டியில் போட்டாலே போதும் என்று அழகாய் அன்பாய் கவிதையாய் சொன்னவிதம் அருமை ஐயா...

  அன்பு வாழ்த்துகள் ஐயா..

  ReplyDelete
 5. அன்புக்கவிதையால் எங்கள் மனதை சுத்தம் செய்திருக்கிறீர்கள்!
  நம்மிலிருந்து தொடங்குவோம்!
  நாட்டை ஏன் குறை கூறுவோம்!

  ReplyDelete
 6. சமீப காலத்தில் நிலைமை மிக மோசமாகித்தான் விட்டது.போர்க்கால அடிப்படை நடவடிக்கை தேவை!

  ReplyDelete
 7. சுத்தம் சோறுபோடும்
  என்று நாமே சொல்லிவிட்டு
  நம் காலடியில் கிடக்கும் குப்பையை
  உதாசீனப்படுத்துகிறோம்
  முதலில் நம்மை நாம் மாற்றவேண்டும்....

  அருமையான கவிதை மூலம்
  அழகாக விளக்கியிருக்கிறீர்கள்
  நன்றி புலவரே..

  ReplyDelete
 8. அருமையான கவிதை...
  சிங்கப்பூர் போல் நம்மூரிலும் சட்டம் வேண்டும்...

  ReplyDelete
 9. சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல கவிதை.
  எங்கும் எதிலும் சுத்தம் ... பரிசுத்தம் தேவை தான்.

  குப்பைகளும் ஊழல்களும் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் ... அகற்றப்பட வேண்டும், வீட்டிலும், தெருவிலும், ஊரிலும், நாட்டிலும், அரசியலிலும் கூடவே.

  நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 10. மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
  மலையென கிடப்பது போகட்டும்

  நல்ல கவிதை.
  மக்களும் ஒத்துழைக்க வேண்டும். சாலையில் நடப்பதற்கு பாதையில்லை. நடைபாதைஎல்லாம் ஆக்கிரமிப்பு. சாக்கடையில் மக்களே குப்பையை தொட்டி நாரடிக்கிரார்கள்.
  நன்றி ஐயா.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

  ReplyDelete
 11. இந்த முறை சென்னை வந்து இருந்த பொழுது, மனதை பெரிதும் உறுத்திய விஷயம் இது. அரசாங்கத்தை குறை கூறுவதா? இல்லை, இந்த குப்பை மேட்டிலும் சகஜமாக இருக்க பழகி விட்டவர்களை பற்றி நொந்து கொள்வதா? என் குழந்தைகள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் என்னிடம் இல்லாமல், ஏதோ சொல்லி சமாளித்தேன். என்ன இருந்தாலும், ஊரை விட்டு கொடுக்க முடியுமா?

  ReplyDelete
 12. வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
  வேதனை விளைவாம் இதுசொல்ல

  வேதனை மாறட்டும்.

  ReplyDelete
 13. உரியோர்
  உணர்ந்தால் போதும் - அருமை ஐயா

  ReplyDelete
 14. உங்கள் கவிதையின் கரு உண்மையாகட்டும்...

  ReplyDelete
 15. சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஒரு நல்ல கவிதை ...

  சமயம் இருந்தால் என் வலதளம் வாருங்கள் ஐயா...

  ReplyDelete
 16. குப்பைகளை ஆங்காங்கே போடும் மனிதருக்கும் ஓர்கவிதை வேண்டும்...
  நல்ல கவிதை புலவரே...

  ReplyDelete
 17. தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி
  தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
  மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
  மலையென கிடப்பது போகட்டும்
  குற்றம் சொல்வது நோக்கமல-இது
  குத்தும் கவிதை ஆக்கமல
  வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
  வேதனை விளைவாம் இதுசொல்ல

  உங்கள் சமூக சிந்தனை அதன் ஆளுமை
  எத்தனை உறுதியாக இருந்தால் இவ்வளவு
  சிறப்பான இயல்பான கவிதை வரிகள் பிறக்கும் .
  அருமை ஐயா உங்கள் கவிதை என் மனத்தைக்
  கொள்ளை அடிக்கின்றது .அதனால் நீங்க நம்ம
  கடைக்கு வாறீங்க என்னையும் வாழ்த்துறீங்க.
  நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 18. மாநகரசபை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தினால் சரிவரக் கவனிக்கப்படாத, தமிழகத்தின் சுற்றுச் சூழலில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி ஓர் விழிப்புணர்வுக் கவிதையினைப் படைத்திருக்கிறீங்க.
  உங்கள் குரல் ஆட்சியாளர்களின் காதுக்கு எட்ட வேண்டும்.

  ReplyDelete
 19. சமூக பொறுப்புள்ள கவிதை புலவரே..
  தொடர்க
  http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

  ReplyDelete
 20. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...