Tuesday, February 14, 2012

முதல்வர் துணிந்தால் வந்திடும் ஒருவிடிவே!



காதே இல்லையா மத்தியிலே –அதைக்
  கண்டும் நமக்கேன் புத்தியிலே
தீதே செய்திட சிங்களனே-தினம்
  தேம்பி அழுதிட மீனவனே-அவனோ
ஏதும் அறியா அப்பாவி-கோட்சே
  எதற்கும் அஞ்சா கொடும்பாவி
வாதோ செய்தினி பயனில்லை-தீவை
   வாங்கிட தொடுப்போம் அறப்போரே

ஒன்றா இரண்டா சொல்லுங்கள்-வரும்
   ஒவ்வொரு நாளும் மல்லுங்கள்
இன்றா நேற்றா இல்லையே-முடிவு
    இல்லாத் தொடர்கதை! தொல்லையே!
கொன்றான் பலரை பலநாளும்-இக்
    கொடுமை அவர்க்கே திருநாளாம்
நன்றா இனியும் வாளாக-உடன்
     நாமும் கொட்டுவோம் தேளாக
   


துணிந்து எடுப்பீர் ஒருமுடிவே-முதல்வர்
   துணிந்தால் வந்திடும் ஒருவிடிவே!
பணிந்து வேண்டியும் பயனில்லை-எடுத்து
   பலமுறை சொல்லியும் பயனில்லை
தணிந்து போவது பெருங்கேடே-நாளை
   தள்ளிப் போடின் வருங்கேடே
அணியென வருவோம் ஆணையிடும்-மக்கள்
   அலையென திரள தவிடுபடும்

                             புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. இது எத்தனை காலப் பிரச்சனை.இதில் ஏதோ அரசியல் தந்திரம் இருக்கிறது ஐயா.அல்லது ஏன் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமலிருக்கிறது.கவிதை உறுத்துகிறது மனதை !

    ReplyDelete
  2. கவிதைக்குள் கொந்தளிக்கும் கோபம் புரிகிறது. இன்றில்லாவிடினும் என்றேனும் இப்படி மக்கள் ஒன்றுகூடித் திரண்டால், முதல்வர் என்ன, பிரதமரும் மிரள்வார்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    மத்திய அரசின் செவிப்பறை கிழியும் வண்ணம் நாம் ஓயாது குரல் கொடுக்க வேண்டும் என்பதனை உங்களின் இக் கவிதை சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  4. துணிந்தால் நன்றாகத்தான் இருக்கும் துணிய மறுக்கிறார்களே...

    மீனர்களின் அவல நிலைக்கு என்று தான் முற்றுப்புள்ளியோ...

    ReplyDelete
  5. அணியென வருவோம் ஆணையிடும்-மக்கள்
    அலையென திரள தவிடுபடும்

    அருமை கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வீரத்தை ஊட்டும் கவிதை...அம்மாவுக்கு வீரம் வருமா என்று பாப்போம்...

    ReplyDelete
  7. நல்ல கவிதை (மனக்குமுறல்) ஐயா!!

    //இன்றா நேற்றா இல்லையே-முடிவு
    இல்லாத் தொடர்கதை!//

    தொடர் கதை முடிக்க மனமில்லை போல, எத்தனை எபிஸோடுகள் செல்கிறது என்று பார்ப்போம் இந் நெடுந்தொடர், வழமையான பொறுமையுடன்.

    ReplyDelete
  8. அன்பின் நண்பரே..உங்களது இடுகை ஒன்றினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    வலைச்சரத்தில் கவிதை சரம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...