Wednesday, April 4, 2012

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!


கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே
   கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே!
பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே
    பெரியோரைத் துணையாகக் காணுதல் நன்றே!
உற்றவர் துயர்கண்டே நீக்குதல் நன்றே
    உண்மையை மறைக்காமல் உரைப்பதும் நன்றே!
அற்றவர் அழிபசி தீர்தலும் நன்றே
     அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

வழியலா வழிசென்று வாழ்வதும் தீதாம்
    வைதாரைப் பதிலுக்கு வைவதும் தீதாம்!
பழிவர எச்செயலும் செய்வதும் தீதாம்
    பாதகர் தம்முடன் பழகலும் தீதாம்!
இழிகுணம் ஒருவர்க்கு என்றென்றும் தீதாம்
    இல்லாரை எள்ளுதல் மிகமிகத் தீதாம்!
விழியெனக் கல்வியை அறியாமை தீதாம்
    வீண்காலம் போக்குதல் வாழ்வுக்கே தீதாம்!

எண்ணியே எச்செயலும் செய்திட வேண்டும்
     எண்ணாமல் ஆபத்தில் உதவிட வேண்டும்!
கண்ணியம் வார்த்தையில் என்றுமே வேண்டும்
    கடமையைத் தவறாது செய்திட வேண்டும்!
புண்ணியம் எதுவென்று அறிந்திட வேண்டும்
    புகழ்பெறப் பிறரைப் புகழ்ந்திட வேண்டும்!
பெண்ணினம் தன்னையே போற்றிட வேண்டும்
     பிறர்வாழ தான்வாழ நினைத்திட வேண்டும்!

                      புலவர் சா இராமாநுசம்



21 comments :

  1. நல்ல கவிதை புலவரே... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அழகிய வரிகள்...
    நல்தொரு கவிதை

    ReplyDelete
  3. வாழ்வியல் நெறிகளை உணர்த்திய அற்புதமான கவிதை. அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். அருமை ஐயா...

    ReplyDelete
  4. நன்னெறி கூறும் நல்கவிதை ஐயா.

    ReplyDelete
  5. எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல
    இப்படித்தான் வாழவேண்டும் என்று
    அருமையாக எடுத்துரைக்கும் அருமையான கவிதை ஐயா..

    ReplyDelete
  6. தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


    மேலும் தங்கள் படைப்புகளை தமிழ்க்குறிஞ்சி அன்புடன் வரவேற்கிறது.

    தங்கள் படைப்புகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் : tamilkurinji@gmail.com

    ReplyDelete
  7. அருமையான வாழ்க்கை நெறிகள்!

    ReplyDelete
  8. கவிதை வழியே செல்ல கடவுளை தன்னகத்தே காணலாம் அற்புதமான வரிகள்...

    ReplyDelete
  9. அருமையான கவிதையை தந்த அய்யாவுக்கு நன்றிகளும், வணக்கங்களும்..

    ReplyDelete
  10. வண்க்கம் அய்யா
    அருமை.
    மிக்க நன்றி

    ReplyDelete
  11. நல்லதும் தீயதும் நயம்படச்சொன்னீர்கள்!

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா!
    அருமையாக நன்மை தீமைகளை எடுத்தியம்பும் கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா.!

    ReplyDelete
  13. அருமையான கருத்தும் சொல்நயமும் மிக்க அழகிய பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. அற்புதமான கவிதை ஐயா...

    ReplyDelete
  15. சூப்பர் கவிதை ஐயா

    ReplyDelete
  16. வணக்கம்! அல்லவை தேய நல்லவைகளை நாடச் சொல்லிய கவிதை வரிகள்!

    ReplyDelete
  17. பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படவேண்டிய கவிதை. நல்ல கருத்துக்களை தமிழுக்கே உரிய இனிமையுடன் தந்திருக்கிறீர்கள் நன்றி ஐயா!

    ReplyDelete
  18. அழகாகச் சொன்னீர்கள் புலவரே.

    ReplyDelete
  19. தமிழாசிரியர் கழகத் திங்களிதழிலே தங்களின் புத்தக வெளியீடு குறித்த செய்தி படித்தேன்.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...