Tuesday, April 17, 2012

ஏகும் உயிரும் ஒருநாளே-அதை எண்ணி வாழ்வோம் இந்நாளே!



அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு
   அரணே எதுவும் வேண்டாமே!
இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும்
    இன்னல் வாரா ஈண்டாமே!
பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிக
    பழைய சோற்றுக்கும் வழியின்றி
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
   பெற்றிட முனைவது நன்றாகும்!


ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்
    இதயம் வேதனைக் கொண்டாலும்!
சான்றோர் பழிக்கும் வினைவேண்டா-என
    சாற்றிய குறளின் வழியிண்டே!
ஆன்றோர் கூறும் நெறிதன்னை-நன்கு
   அறிந்து நடப்பின் துயருன்னை
தோன்றா வகையில் வளந்தருமே-என்றும்
   தோல்வி காணா உளம்பெறுமே!


நல்லார் ஒருவர் உளரானால்-மழை
   நாளும் பெய்யும் பலருக்கும்
வல்லார் வாய்ச்சொல் மறையாகும்-நல்
  வாழ்வில் ஒழுங்கு முறையாகும்
எல்லாம் உடையார் என்றாலும்-வரும்
   எதிர்ப்பை எதிர்த்து வென்றாலும்
பல்லார் போற்றலே வாழ்வாகும்-வீண்
   பழிவர சாற்றிடின் வீழ்வாகும்

ஆகும் காலம் எல்லாமே-நம்
   அருகே வருமே சொல்லாமே
போகும் காலம் என்றாலே-அது
   போகும் எதுவும் இல்லாமே
சாகும் காலம்  தேடிவர-பெற்ற
   சாபமும் பாபமும் ஓடிவர
ஏகும் உயிரும் ஒருநாளே-அதை
   எண்ணி வாழ்வோம் இந்நாளே!


13 comments :

  1. வணக்கம் ஐயா ..நலம்தானே..

    ஆகும் காலம் எல்லாமே-நம்
    அருகே வருமே சொல்லாமே
    போகும் காலம் என்றாலே-அது
    போகும் எதுவும் இல்லாமே..

    ஆமாம் ஐயா சரியாகச் சொன்னீர்கள்..

    ReplyDelete
  2. நல்லார் ஒருவர் உளரானால்-மழை
    நாளும் பெய்யும் பலருக்கும்/// மிகச் சரியான உண்மை ஐயா.

    ReplyDelete
  3. ஃஃஃசான்றோர் பழிக்கும் வினைவேண்டா-என
    சாற்றிய குறளின் வழியிண்டே!ஃஃஃஃ

    அந்த இரண்டில் எத்தனை அடக்கப்பட்டது ஐயா..

    நன்றி நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

    ReplyDelete
  4. அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  5. படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் !

    http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html

    ReplyDelete
  6. உயிர்வாழ பிராண வாயுவின் சுவாசம் தேவை..
    தமிழின் சுவை அரிய தங்களின் எழுத்துக்கள் போதும் ஐயா...

    ReplyDelete
  7. நல்ல அருமையான கவிதை ஐயா

    ReplyDelete
  8. "எல்லாம் உடையார் என்றாலும்-வரும்
    எதிர்ப்பை எதிர்த்து வென்றாலும்
    பல்லார் போற்றலே வாழ்வாகும்-வீண்
    பழிவர சாற்றிடின் வீழ்வாகும்"
    நன்றி,ஐயா..!

    ReplyDelete
  9. புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!

    // ஏகும் உயிரும் ஒருநாளே-அதை
    எண்ணி வாழ்வோம் இந்நாளே! //

    மரணத்தை மறந்து ஆட்டம் போடும் மாந்தருக்கு, ஒரு நினைவூட்டல் உமது கவிதை.

    ReplyDelete
  10. //பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிக
    பழைய சோற்றுக்கும் வழியின்றி
    பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
    பெற்றிட முனைவது நன்றாகும்!//
    என்னைக் கவர்ந்த வரிகள்

    ReplyDelete
  11. பெற்ற
    சாபமும் பாபமும் ஓடிவர
    ஏகும் உயிரும் ஒருநாளே-அதை
    எண்ணி வாழ்வோம் இந்நாளே!//

    அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...