Tuesday, May 15, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!


எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!


ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

                                        புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. தமிழுக்கு வக்காலத்து வாங்கும் உங்க கவிதைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. இதுக்கு ஆட்சியை மட்டும் குறை சொன்னால் சரியாய் வருமா... தெரியவில்லை அண்ணா? மற்ற நாட்டவன் விரும்பிக் கற்கும் தமிழில் பேசுவது தவறென்று அதிகம் சொல்வது தமிழன் தான்...

    ReplyDelete
  3. தமிழ்ல பேசினால் கூட கேவலமா பார்க்குறாங்க ஐயா. என்று மாறும் இந்த அவலம்?!

    ReplyDelete
  4. விரைவில் இந்த அவலநிலை மாறிவிடும் ஐயா..

    ReplyDelete
  5. வணக்கம் ராஜி அக்கா,

    ///தமிழ்ல பேசினால் கூட கேவலமா பார்க்குறாங்க ஐயா. என்று மாறும் இந்த அவலம்?///

    அதுக்குரிய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது அக்கா :(

    ReplyDelete
  6. கருத்தாழம் கொண்ட கவிதைகளைப் பெற்று
    விருந்தாக உண்டு களித்தேன்! - விருத்தமுடன்
    வெண்பாவும் நற்றமிழை வீசுமிளங் காற்றென
    பண்..பாவால் கற்றேன் படித்து.

    ReplyDelete
  7. எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!
    இன்று எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம்
    எனும் நிலைமை ஆயிவிட்டதே புலவர் ஜயா...

    ReplyDelete
  8. தாய்த் தமிழின் பற்றுதல் உங்கள் கவிதையில் ஐயா !

    ReplyDelete
  9. விரைவில் இந்த அவலநிலை மாறி விடும் ஐயா... வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்....

    ReplyDelete
  10. அவ நிலை மாறும் நாள் வரும்-அன்று
    தமிழர் வாழ்வு நலம் பெறும்.

    ReplyDelete
  11. பா வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வெண்பா.
    வெண்பாவில் தமிழின் நிலை பற்றி அழகாக சொல்லியது சிறப்பு.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...