Sunday, June 17, 2012

சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்

       இனிய உறவுகளே!
                சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்
     பேராசிரியர், தி வா மெய்கண்டார் அவர்கள் நடத்தும்
     இளந்தமிழன் என்னும் இதழ் பற்றிய விளக்கமும்
                                   வாழ்த்தும்

இளந்தமிழன் என்னுமொரு திங்கள் ஏடே-நல்
   இலக்கியமாய் வருகிறது! இல்லை ஈடே!
உளந்தமிழே மெய்கண்டார் மெய்யே கொண்டார்-பல
   உண்மைகளை உள்ளபடி இதழில் விண்டார்
வளந்தருமே தமிழுக்கும் அவரின் தொண்டே-இதழ்
   வரலாற்றில் தனியிடமே அவருக்   குண்டே
அளந்தறிய இயலாத சிறந்த அன்பே-எதிலும்
   அடக்கம்தான் அவரிடத்து கண்ட பண்பே!

அந்நாளின் செய்திகளை நாமும் அறிய-அவர்
    ஆற்றுகின்ற அரும்பணியை சொல்லல் அரிய
எந்நாளும் படிப்பதற்கு ஏற்ற வகையில்-பல
   எண்ணற்ற சான்றோரின கருத்துக் குவியல்
இந்நாளில் பலர்காண இதழில் வருமே-நம்
   இதயத்தில் தனக்கென்றே இடமும் பெறுமே
பொன்னாக அதைப் போற்றிக் காக்கவேண்டும்-தமிழ்
   பெருமைக்கு அதுமேலும் வளர யாண்டும்!

பயன்கருதா நோக்கமுடன் செய்யும் பணியே-நம்
   பைந்தமிழுக் கழகூட்டும் பொன்னின் அணியே
நயன்தூக்கிக் கட்டுரைகள் எதையும் செய்தே-இதழ்
   நடத்துவதால் பட்டறிவு நாமும் எய்த
சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்-அவர்
   சமுதாய வாழ்வுக்கே தன்னை ஈன்றார்
தமரொன்றே தமிழென்றே வாழும் பெரியார்-ஏதும்
   தன்னலமே இல்லாத தூய்மைக் குரியார்!

தனக்கென்றே தனிப்பாதை வகுத்துக் கொண்டே-இளந்
   தமிழனென இதழ்தன்னில் செய்யும் தொண்டே
மனக்குன்றில் மறையாது வடிக்கும் மொழியே-நம்
   மாத்தமிழின் சிறப்பினைக் காணும் விழியே
எனக்கென்ற சுயநலம் ஏதும் இல்லார்-பலர்
   எண்ணத்தில் மெய்கண்டார் வாழும் நல்லார்
வனக்குயிலாய் முத்தமிழின் இசையே பாட-தமிழ்
   வரலாற்றில் அவர்புகழே நெஞ்சில் ஆட


                      புலவர் சா இராமாநுசம்
                   மேனாள் மாநிலத் தலைவர்
                   தமிழகத் தமிழாசிரியர் கழகம்










10 comments :

  1. வாழ்த்துக்கள் அன்பருக்கு

    ReplyDelete
  2. பேராசிரியர், தி வா மெய்கண்டார் அவர்கள் நடத்தும்
    ‘இளந்தமிழன்’ என்னும் இதழ் பீடு நடை போட உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  3. சேர்ந்தே வாழ்த்துவோம்.!

    ReplyDelete
  4. இதழ் பெரிதும் வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இளந்தமிழனின் வெற்றியில் ஐயமேது?
    என் வாழ்த்துகளும்

    ReplyDelete
  6. தமிழ் வளர்க்கும் இளந்தமிழன் வாழ்க!

    ReplyDelete
  7. உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  8. அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.

    ReplyDelete
  9. என்றும் இளமையுடன் இருக்கும் இளந்தமிழை இளந்தமிழன் என்ற பத்திரிகை மூலம் செழுமைப் படுத்தும் தி வா மெய்கண்டார் அவர்களுக்கு என் வணக்கங்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...