Friday, September 21, 2012

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
    பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
   பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
    தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
    வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்

சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!
செலவும் வரவும் அறியோமே-எடுத்து
    செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
   ஆகுமோ? என்றே குலைகிறதே!

பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
  பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
   அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
   போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
   இயல்பாய் நமக்கும் போனதுவே!


ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
   உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
   கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
    போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
   வந்திடும் மேலும் மின்வெட்டே!

                            புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. நம் அனைவரின் அவல நிலையை
    மக மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
    நான் பின்னூட்டமிடுபவ்ர்களுக்கு
    நன்றி தெரிவித்தலை விரும்பிச் செய்வேன்
    இப்போது கிடைக்கிற மின்சாரமுள்ள நேரத்தில்
    பதிவுகளைப் படிக்கவும் பின்னூட்டமிடவுமே
    நேரம் சரியாக இருக்கிறது
    என்றிந்த இன்னல்கள் தீருமோ ?
    ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்

    ReplyDelete
  2. ஒரு இன்வெர்ட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் :)

    ReplyDelete
  3. //பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
    பவர்கட் தருவதும் சரிபாதி!// உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  4. //வந்திடும் மேலும் மின்வெட்டே!//
    உண்மைதான் ஐயா. இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிக மின்வெட்டை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறேன். எப்போது தீரும் இந்த அவலம் எனத் தெரியவில்லை. நாட்டு நடப்பை கவிதையில் வடித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. //"பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
    பவர்கட் தருவதும் சரிபாதி!"//

    மிக அருமையான உண்மை வரிகள் ....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. முன்பு 13 to 16 மணி நேரம் போகும்...

    இப்போது 6 மணி நேரம் தான் இருக்கிறது...

    ReplyDelete
  7. இப்போது மின்சாரம் எப்போ இருக்கிறது என்றே தெரியவில்லை...அந்த அளவுக்கு மின்வெட்டு ஆரம்பிசுடிச்சி..

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  8. தமிழ்நாட்டில் மின்வெட்டு மிக மிக பிரச்சனைகளை உண்டாக்கி நிம்மதி இல்லாமல் செய்கிறது மக்களை என்பதை மிக அருமையான வரிகளில் உணர்த்தி இருக்கிறீர்கள் ஐயா... அது மட்டுமல்லாது. மின்வெட்டு அதிகமானதே மக்களுக்கு அவஸ்தை என்றால் அதோடு மின் கட்டணமும் அதிகம் உயர்த்தி இன்னும் சிரமப்படுத்துகிறார்கள்.. அரசியல்வாதிகள் மாத்திரம் கொழிக்கிறார்கள். அவர்களுக்கு மின்வெட்டும் இல்லை மின் கட்டணம் செலுத்தும் சிரமமும் இல்லை.. ஓட்டு வாங்கும்போது போடும் கூழைக்கும்பிடு நாம் ஒரு போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளத் தோணுகிறது....

    அருமையான வரிகள் ஐயா.. பகிர்வுக்கு அன்புநன்றிகள்.

    ReplyDelete
  9. வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளையே கவிதையாக்கி அழுத்தாமாகச் சொல்கிறீர்கள் .நன்று”பைத்தியம் தெளிவதில்லை என்று என் வலையில் ஒரு கவிதை.உங்கள் கருத்து வேண்டும்.

    ReplyDelete
  10. சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
    உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!

    இயல்பான சொற்கள். மின்வெட்டின் மூலம் உங்களின் அன்றாட மனநிலையையும் பதிவு செய்திருப்பது. அருமை ஐயா.

    ReplyDelete
  11. சமீபகாலமாக மின்வெட்டு என்பது மிகப் பெரும் தொல்லையாக மாறி வருகிறது. அனைவரின் மனக்குமுறலை அழகான கவிதையாக எதிரொலித்திருக்கிறீர்கள் அருமை ஐயா.

    ReplyDelete
  12. 11 மணி நேர மின்வெட்டு எங்கள் ஊரில்... வசதிபடைத்தவர்கள் எப்படியும் இன்வெட்டர் ஜெனரேட்டர்ன்னு சமாளிக்கிறாங்க.. பாவம் நடுத்தர மக்கள் தான்!

    உங்க கவிதையில் அவர்களின் கஷ்ட்டத்தை கொண்டுவந்து காட்டீட்டீங்க...

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா.

    மின்வெட்டால் ஏற்படும் தொல்லைகளைப் படித்தேன்
    அருமையாக உள்ள நிலையை விளக்கியுள்ளீர்கள். நன்றி.

    உங்களின் இந்த விசிறிக்கு ஒரு சின்ன ஆசை.
    ஆதாவது... மின்வெட்டால் டீ.வி, வானொலி, மிக்சி கிரெண்டர்
    முக்கியமாக தேய்ந்து போன ஃபேன் சத்தம் இதெல்லாம்
    இல்லாமல்... இயற்கையை இரசிப்பதாக உங்கள்
    பாணியில் ஒரு கவிதை தாருங்கள்.

    நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  14. எல்லையில்லா சக்தி
    இல்லையென ஆனபின்
    எதுவுமே கடினம்தான் - அட
    எழுதுவதைதான் சொல்கிறேன்

    ReplyDelete
  15. எப்போது தீரும் என்று தெரியவில்லையே..

    ReplyDelete
  16. எப்பொழுதும் போல் கவிதை அழகு. நீண்ட காலத் திட்டங்களை வகுக்க வேண்டும் நாமும் பயன் பாட்டைக் குறைக்க வேண்டும்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...