Sunday, December 2, 2012

இன்னுமா வாழ்கிறது ஒருமைப் பாடே! –அதை எண்ணியே ஏமாந்து அடைந்தோம் கேடே!





இன்னுமா வாழ்கிறது  ஒருமைப் பாடே! அதை
     எண்ணியே  ஏமாந்து  அடைந்தோம்  கேடே!
மின்னுமா  மின்னலென  வானம்  நோக்க கலையும்
     மேகத்தால்  கண்ணிரண்டும்  நீரைத்  தேக்க
மன்னுமா  வாழ்க்கையென  தேம்பு  கின்றான் துயர்
    மண்டியதால்  வெதும்பிமனம்  கூம்பு  கின்றான்!
தன்னுயிரை  விடுவதற்கும்  துணிந்து  விட்டார்கன்னடர்
     தருவார்கள்  நீரென்றே நம்பிக்  கெட்டார்!

வயலெல்லாம்  வெடித்துவிடக்  காணும் காட்சி உழவன்
     வாய்விட்டு  அழுகின்றான் ! உண்டா ? மீட்சி!
பெயலின்றி  போயிற்றே  பருவக்  காலம் எதிர்
    பேயாக  விரட்டுமே  வறுமைக்  கோலம்!
தயவின்றி  ஒருதலையாய்   மத்திய  அரசேவழக்கை
    தள்ளிவைக்க  பயிர்கருகி  ஆகும் தருசே!
பயனின்றி  தமிழகமே வாளாய்க்  காண என்றும்
    பழிக்குமே  எதிர்காலம்  நாமும்  நாண!

கொட்டிவிட்ட  நெல்லிக்காய்  மூட்டை  ஆனோம் ஒன்று
      கூடிவிட வழியின்றி சிதறிப் போனோம்!
கட்டிவிட்ட  வேலியது  கம்பிபோல  இங்கே மின்
      கம்பங்கள் !காணுகின்றோம்  சாரம் எங்கே ?
திட்டமில்லை  நம்மிடையே  கூடிப்  பேச நல்
      திறனிருந்தும்  போட்டியிட்டு  வீணில்  ஏச!
எட்டியென  நம்வாழ்வு கசந்து  போகும்  -வரும்
      எதிர்கால  நிலையெண்ணில்  உள்ளம்  வேகும்!

நெய்வேலி  மின்சாரம்  மட்டும்  வேண்டும்  -சொட்டு
       நீர்கூட  இல்லையென  மறுத்தார்  மீண்டும்!
பொய்வேலி   ஏகமெனல்  புரிந்து  கொள்வோம் மேலும்
       பொறுமைக்கும்  எல்லையுண்டு  பொங்கி  எழுவோம்!
செய்வீரா !? இனியேனும்  ஒன்று  படுவீர் -உடன்
      சிந்தித்து  செயல்பட  ஈகோ  விடுவீர்
உய்வீராம் அதன்பின்னே  எண்ணிப்  பாரீர்  -நம்
       உரிமையைக்  காத்திடத்  திரண்டு  வாரீர்

                                  
                            புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வழி வந்த நாம்,
    //கொட்டிவிட்ட நெல்லிக்காய் மூட்டை ஆனோம் –ஒன்று
    கூடிவிட வழியின்றி சிதறிப் போனோம்!//
    இந்நிலை என்று மாறுமோ?

    ReplyDelete
  2. தன்மானம் தவறி நிற்கும் தமிழனை ஒன்றுகூடி யோசிக்க வைக்கும் கவிதை

    ReplyDelete
  3. என்னத்தை சொல்வது. மிருகங்கள் ஒன்று கூடி உண்கின்றன. மனிதர்கள்...

    ReplyDelete
  4. //
    இன்னுமா வாழ்கிறது ஒருமைப் பாடே! –அதை
    எண்ணியே ஏமாந்து அடைந்தோம் கேடே!//
    அது குதிரைகளுக்கு பூட்டப்பட்ட கடிவாளம்
    நீங்கள் சுற்றும் முற்றும் பார்த்து மிரண்டுவிடாமல் இருக்க
    ஒரு கண்ணில் தேசிய ஒருமைப்பாடு மற்றொரு கண்ணில் இந்திய இறையான்மை
    தேசிய பாதுகாப்புச்சட்டம் அதன் கடிவாளம்

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  6. வயலெல்லாம் வெடித்துவிடக் காணும் காட்சி –உழவன்
    வாய்விட்டு அழுகின்றான் ! உண்டா ? மீட்சி!

    எல்லாம், உண்மையான மனதைத்தொட்ட வரிகள், இப்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனின் புலம்பல்களும் இவையாகத்தான் இருக்கும்.
    மிக அருமை புலவரே!

    ReplyDelete
  7. //வயலெல்லாம் வெடித்துவிடக் காணும் காட்சி –உழவன்
    வாய்விட்டு அழுகின்றான் ! உண்டா ? மீட்சி!//

    கண்முன்னே விரிகிறது அவர்கள் சோகம்...

    ReplyDelete
  8. தண்ணீரைப் பகிரவே மனசில்லை!ஒருமைப் பாடா?

    ReplyDelete
  9. மிக்க நன்றி!

    ReplyDelete
  10. அருமையான வரிகள்...
    எங்களால் படிக்க மட்டும் தான் முடிகிறது.
    நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...