Showing posts with label இரங்கல் கவிதை துக்கதினம் பிரிவிடை ஆற்றாநிலை. Show all posts
Showing posts with label இரங்கல் கவிதை துக்கதினம் பிரிவிடை ஆற்றாநிலை. Show all posts

Monday, February 6, 2012

நாளை உமது துக்கதினம்!


மாயா மாயா மாயாவே-நீர்
     மறைந்த துயரம் ஓயாவே!
காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ
     காலன் கைவசம் ஆனீரே!
தேயா பிறையாய் மனவானில்-என்றும்
    தெரிய வாழ்வாய் குணவானே
சாயா குன்றே பதிவுலகில்-ஏனோ
     சாய்ந்தாய் நிலைப்பது எதுவுலகில்?


உன்னை நினைத்தே வாடுகின்றோம்-உம்
    உறவைப் புகழ்ந்தே பாடுகின்றோம்
என்ன துயரம் என்றேனும்-உங்கள்
    எழுத்தில் அறியோம் ஒன்றேனும்
மின்னல் இன்றி இடியொன்றே-வந்து
    மேலே விழுந்தது போலின்றே
கன்னல் எழுத்துக் கலைவாண-உமக்கு
    கண்ணீர் அஞ்சலி செய்கின்றோம்!


தனக்கெனத் தனித்திறன் மிகுந்தவரே-உறவு
    தவிக்க விண்ணில் புகுந்தவரே
மனத்துயர் ஆற்றிட மருந்துண்டா-உமை
    மறந்திட எமக்கே வழியுண்டா?
கனவென மறைந்து விட்டீரே-எம்
    கண்ணின் பார்வைக்கு எட்டீரே
அனைவரின் அழுகுரல் கேட்டீரா-ஒரு
    ஆறுதல் உரைக்க மாட்டீரா?


நாளை உமது துக்கதினம்-என
     நம்ப மறுக்குது எமதுமனம்
வேளை வந்தா? போய்விட்டீர்!-தலை
     விதியென சொல்லவா உயிர்விட்டீர்!
ஆளை எங்கே காணோமென-செய்தி
     அறியார் கேட்டால் சொல்வதென
காளை போல வலம்வந்தீர்!-என்ன
     கருத்தில் விண்ணாம் புலம்சென்றீர்!
     

             புலவர் சா இராமாநுசம்

     


           
          

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...