Showing posts with label மீள் பதிவு கவிதை புனைவு. Show all posts
Showing posts with label மீள் பதிவு கவிதை புனைவு. Show all posts

Saturday, May 26, 2012

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்!


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்!
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்!
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
!கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்!

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்!
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
   தேசமும் மதவெறி பித்தரென!
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...