Showing posts with label மீள்பதிவு கவிதை புனைவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு கவிதை புனைவு. Show all posts

Saturday, December 1, 2012

தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்!




புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை-  புலவர் சா இராமாநுசம்

      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்

      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்

             அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்

                                                            
                              புலவர் சா இராமாநுசம்

Saturday, June 2, 2012

மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்!


உண்ணும் உணவும் நஞ்சாகும்-நாம்
     உட்கொள்ளும் மருந்தும் நஞ்சாகும்
எண்ணும் எண்ணமும் நஞ்சாகும்-நம்
     எழுதும் எழுத்தும் நஞ்சாகும்
கண்ணும் பார்வையால் நஞ்சாகும்-சில
     கருத்துகள் கூட நஞ்சாகும்
பண்ணும் பாடலில் நஞ்சாகும்-இறை
    படைப்பில் சிலவும் நஞ்சாகும்

காற்றும் இன்றே  நஞ்சாகும்-அலை
    கடல்தரும் உணவும் நஞ்சாகும்
தூற்றும் குணமே நஞ்சாகும்-உற்ற
    துணையே சிலருக்கு நஞ்சாகும்
போற்றும் போலிகள் நஞ்சாகும்-சேர்த்த
    பொருளும் சிலருக்கு நஞ்சாகும்
ஆற்றல் மிகுதியும் நஞ்சாகும்-ஏதும்
    அறியா நிலையும் நஞ்சாகும்

உற்றார் சிலரும்  நஞ்சாகும்-பெற்ற
      உரிமையும் கூட நஞ்சாகும்
பெற்றவர் பிள்ளைக்கே  நஞ்சாகும்-சில
      பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
      கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
     மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்


            புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...