Tuesday, March 12, 2013

மனித நேயம் இல்லையா மத்திய அரசே சொல்லையா?



மனித நேயம் இல்லையா
      மத்திய  அரசே  சொல்லையா?

தினமேத்  தொல்லைப்  படுகின்றான்
      தேம்பியே  மீனவன்  கெடுகின்றன்
மனமே  இரங்க  வில்லையா
       மனதில்  அரக்கனா சொல்லையா!

சுண்டைக்  காய்போல்  அந்நாடே
    சொன்னால் வெட்கம்  பெருங்கேடே
அண்டையில்  இருந்தேத்  தரும்தொல்லை
    அளவா?  அந்தோ  துயரெல்லை!

கச்சத்  தீவைக்  கொடுத்தீரே
      காரணம்  எதுவோ  ?கெடுத்தீரே
அச்சப்  பட்டே மீனவனும்
       அல்லல்  படுவதைக்  காண்பீரே!

படகொடுப்  பிடித்தே  மீனவரைப்
      பாழும்  சிறையில்  தள்ளுகின்றான்!
இடமிலை  மீனவர்  உயிர்வாழ
     எண்ணமும்  உமக்கிலை  அவர்வாழ!

மாநில  அரசையும்  மதிப்பதில்லை!
    மத்திய  அரசுக்கோ  செவியில்லை!
நாமினி  செய்வதை  ஆய்வோமா?
      நல்லது  நடப்பின்  உய்வோமா?

கடிதம் எழுதினால் போதாதே
    காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
     முடங்கிட மீனவர் விடுப்பீரா?

அலைகடல் தானே அவன்வீடாம்
     அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
    நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?
 
                  புலவர்  சா  இராமாநுசம்

14 comments :

  1. கடிதம் எழுதினால் போதாதே
    காரியம் அதனால் ஆகாதே!//
    ஆம் அரசியல் தீர்வு வேண்டி மத்திய அரசுதான் அழுத்தம் கொடுக்கணும்

    ReplyDelete
  2. கடிதம் எழுதுபவன் தலைவனாகிறான்.
    எதிர்த்து போராடுபவன் தேசத்துரோகி ஆகிறான்.

    ReplyDelete
  3. மாநில அரசையும் மதிப்பதில்லை!
    மத்திய அரசுக்கோ செவியில்லை!
    நாமினி செய்வதை ஆய்வோமா?
    நல்லது நடப்பின் உய்வோமா?

    ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது.

    ReplyDelete
  4. அலைகடல் தானே அவன்வீடாம்
    அந்தோ! இன்றது சுடுகாடாம்!
    நிலைமை அப்படிப் போகுமன்றோ
    நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?

    மனதில் எழுகின்ற வலிகள் கவிதை வரிகளாகக்
    காண முடிவது எப்புதும் உங்கள் எழுத்துக்களில் தான் ஐயா !!!!......

    ReplyDelete
  5. மய்ய அரசில் வெளியுறவுத் துறையில் உள்ளவர்கள்(அண்டை மாநிலத்தவர்கள் உட்பட ) தமிழர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால்
    நிலைமையின் தீவிரம் அறிந்தும்/தெரிந்தும், எதுவும் செய்யாதிருப்பது தமிழனின் தலை விதி போலும். கவிதைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  6. மீனவர்கள் தினம் தோறும் சுடப்படுவது வேதனையான விசயம்! ஆட்சி மாறினால் இந்த காட்சி மாறுமா என்று பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  7. மனித நேயம் இருந்தால்
    மத்திய அரசில் இருக்க முடியாதே...

    கவிதையில் வார்த்தைகள் சுடுகின்றன புலவர் ஐயா.

    ReplyDelete
  8. கவிதை ரொம்ப அருமை ஐயா...
    எத்தனை புரட்சி வெடித்தாலும் மத்தியில் ஆள்பவர் மதிப்பதில்லையே ஐயா...

    ReplyDelete
  9. மனிதம் இழந்துபோனார்கள் இவர்கள்...
    அள்ளிக்கொடுக்கும் வள்ளல்களோ இவர்கள்...
    குடும்ப சொத்து போல
    வாரி இறைத்துவிட்டனர்
    இன்றோ நாம் படாதபாடு படுகிறோம்...

    ReplyDelete
  10. //கச்சத் தீவைக் கொடுத்தீரே
    காரணம் எதுவோ ?கெடுத்தீரே
    அச்சப் பட்டே மீனவனும்
    அல்லல் படுவதைக் காண்பீரே!//

    ஒரு பொருளை ஒருவனுக்கு தனமாகவோ அன்பளிப்பாகவே கொடுத்து விட்டு அதை திருப்பி கேட்பதும், மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டுவதும்தான் தமிழர்களின் பண்பாடா?

    ReplyDelete
  11. கவிதை அருமை ஐயா,இந்திய காங்கிரஸ் அரசாங்கத்திற்கு தமிழர் என்றால் ஆகாதே.பிறகு எப்படி மீனவர் பிரச்சினையை பற்றி கவலைப்படும்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...