Tuesday, February 18, 2014

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!  மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
                    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!
    இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
                  எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
    புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
                  புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
    அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
                  வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

      ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
                    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
      வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
                  வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
      இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
                எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
      திருமுறை எந்நாளும் மரபே ஆகும்-இன்றேல்
                தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

      இலக்கியம் கண்டேபின் இலக்கணம் கண்டார்-பின்
                  எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
     கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
                கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
     விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதனை
                வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
      அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
            அழியாமல் காப்பதும் நமக்குள்ள பொறுப்பே

      மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
                மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
      விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
              வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே
      பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
              பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
     அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
              ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை

                                                புலவர் சா இராமாநுசம்
             மீள் பதிவு

24 comments :

 1. பலரது மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும் அதே வருத்தம், நியாயமான தங்களின் ஆதங்கம் அழகுக் கவிதையாக வடிவெடுத்திருக்கிறது! பலன் கிடைதத்தால் மிகமிக மகிழ்வோம் நாம்!

  ReplyDelete
 2. /// திருமுறை எந்நாளும் மரபே ஆகும்-இன்றேல்
  தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும் ///

  சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

  ReplyDelete
 3. நிறை இலக்கணங்கள் படிக்கவேண்டும்...

  முயன்றால் முடிவும்...

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. வணக்கம்
  ஐயா.

  உண்மைதான் ஐயா. மிகச்சிறப்பாக சொன்னீர்கள்..... கவிதை வடிவில். வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. மரபுக்கவிதையின் சிறப்புகளை
  எடுத்துரைக்கும் நற்கவிதை இது.
  புலவர் இராமானுசம் அவர்களுக்கு
  தமிழ் வலை உலகம் நன்றி சொல்கிறது.

  சுப்பு தாத்தா இந்த முத்தான பாடலை
  இங்கே பாட கேட்பீராக.
  www.wallposterwallposter.blogspot.in

  ReplyDelete
 7. மரபு கவிதைகளை மறக்க முடியாதுதான்,கால மாற்றத்தில் உருவாகும் கவிதைகளை மறுக்க முடியாதே !
  த ம 3

  ReplyDelete
 8. புதுக்கவிதை என்ற பெயரில் ஒரு நயமும் இல்லாமல் வசனக் கிறுக்கல்களை உடைத்து எழுதி கவிதை என்பதை நான் ஏற்பதுமில்லை வாசிப்பதுமில்லை மரபுக் கவிதைகளே மிக மிக தேவையானவை அருமையானவை அழகானவை. :)

  ReplyDelete
 9. மரபுக் கவிதை எல்லோருக்கும் புரியாதே!

  ReplyDelete
  Replies
  1. இன்றைய கால கட்டத்தில் மரபு என்பது
   என்ன என்பதே பலருக்குப் புரியவில்லையே !!

   சுப்பு தாத்தா.
   www.wallposterwallposter.blogspot.in

   Delete
 10. அருமையான யோசனை ! தங்களின் கடமை எதுவோ அதையே தான்
  இங்கும் உணர்த்தி உள்ளீர்கள் ஐயா தங்களின் தமிழ்ப் பணிக்கு நான்
  தலை வணங்குகின்றேன் .

  ReplyDelete
 11. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
  மிக்க நன்றி.
  தங்கள் பதிவை எனது "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.

  ReplyDelete
 12. அய்யா வணக்கம். எனது விழுதுகளுக்கு உங்களைப் போல்வார்தாம் வேர்கள்! தலைப்பிலும் உள்ளே முதல் வரியிலும் “மரப்பு“ என்று வ்ந்திருக்கிறது சரிதானா அய்யா?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! தவறுதான் தம்பி! தட்டச்சு தடுமாற்றம் கண் பார்வை குறைவு இயலாத முதுமை! காரணம் என்றாலும்
   தவறு தவறுதான்! வருந்துகிறேன்! பொறுத்தருள்க!

   Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...