Friday, September 5, 2014

பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்


எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு-(2011)

8 comments :

  1. ஆண்டுகள் பல போனாலும் என்றும் பொருந்தும் அருமைக் கவிதை !
    த ம 1

    ReplyDelete
  2. ஆசிரியப் பணியில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்று விட்டாலும் இன்றும் என்றும் நீங்கள் ஒரு ஆசிரியரே! புலவர் அய்யாவுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
  3. ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  4. கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
    காரணம் யாருக்கும் புரியவே இல்லை//உண்மைதான் அய்யா

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  8. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...