Thursday, October 29, 2015

வெண் மதியும் வீசும் தென்றலும்!


மதி!
விண்மீது தவழ்கின்ற வெண்மதியைப் பாராய்-இரு
விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!


தென்றல்!
தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

 
புலவர் சா இராமாநுசம்


36 comments :

 1. தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
  தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
  நன்றே சொன்னீர்கள்
  சிறந்த பாவரிகள்

  ReplyDelete
 2. ஒவ்வொரு வரியும் அழகு ஐயா... ரசித்தேன்...

  ReplyDelete
 3. மிக மிக அருமை ஐயா!

  கற்பனையும் கவியாப்பும் காட்சியாய்த் தெறிக்கின்றது!
  அற்புதம் ஐயா!

  மதியும் தென்றலும் என்றவுடன்
  நான் என்னையும் சசிகலாவையும்
  சேர்த்து எண்ணிக்கொண்டேன் ஐயா!..:)

  மிக்க நன்றி! வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 4. இடியும் மின்னலும் மழையும் தான் இனி என எண்ணி
  இணையத்தைத் திறந்து பார்த்தால்,
  இதமான தென்றலும் சொக்கவைக்கும் முழு
  மதியும் மயக்குகிறதே !!

  புலவர் வந்துவிட்டால்
  கார்காலமும்
  காதல் கவிதை பாடுமோ !!

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 5. கற்பனையும் இயற்கையும் கைகோர்க்கும்போது கவிதையின் உயிர்ப்பு அதகமாகிவிடுகிறது. நன்றி.

  ReplyDelete
 6. வீசும் தென்றல் காற்றினிலே வெண்மதியை ரசிக்கும் காட்சி சிறப்பானது! அழகாய் கவிதை சொன்ன ஐயாவிற்கு நன்றி!

  ReplyDelete
 7. "வெண் மதியும் வீசும் தென்றலும்"

  ஆஹா! அருமை புலவர் அய்யா!

  "இயற்கை இன்பம் இதயத்துள் இறங்குதய்யா
  வயப்பட்டு வார்த்தை வர மறுக்குதய்யா
  சுய சிந்தை கவிசூரியனே சுகம் கண்டேன்
  அயராது சுற்றும் கவிபுவியே வாழ்க!"
  த ம+
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 8. அழகான வர்ணனைக் கவிதை!
  த ம 10

  ReplyDelete
 9. நண்பர் ஒருவரின் பதிவில் வீசுதென்றல் காற்றிருக்க வேறென்ன வேண்டுவதோ என்று படிக்க அதை வைத்தே ஒரு பதிவு எழுதிய நினைவு வருகிறது கவிதையை ரசித்தேன்

  ReplyDelete
 10. கவிதை மிகவும் நன்று ஐயா வாழ்த்துகள்
  தமிழ் மணம் முதலாவது

  ReplyDelete
 11. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

  மதி கொஞ்சும் மகத்தான கவிதை - தென்றல்
  அதில் விஞ்சும்...நெஞ்சம் தஞ்சமுன் தமிழுக்கு!

  த.ம.11

  ReplyDelete
 12. தண்மதியும் தென்றலும்போல் சுகமான கவிதை

  ReplyDelete
 13. தென்றல் வீச நிலசை ரசித்தேன்.

  நன்றி

  ReplyDelete
 14. நிலவை எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 15. நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
  நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
  கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
  கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
  சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
  சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
  காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
  கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ


  என்ற பாரதிதாசனின் கவிதையை நினைவுபடுத்திவட்டது புலவரே தங்கள் கவிதை.. நன்று.

  ReplyDelete
 16. ஒவ்வொரு வரியும்
  ஒவ்வொரு சொல்லும்
  அழகு ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...