Friday, May 8, 2015

ஓடின ஐந்து ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே!
ஓடின ஐந்து ஆண்டுகளே-என்
உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
படைத்தேன் படித்திட நீரிங்கே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

புலவர் சா இராமாநுசம்

20 comments :

 1. மனதைப் பிசையும் கவிதை.

  ReplyDelete
 2. தங்களுக்கு ஆறுதல் கூற
  வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன் ஐயா
  பிரிவின் சோகத்தை மாற்றும் வார்த்தைகள் ஏது
  தம +1

  ReplyDelete
 3. மனதை நெகிழ வைத்தது ஐயா...

  ReplyDelete
 4. கண்களை கசிய வைத்த வரிகள் தங்களுக்கு ஆறுதல் எனக்கு பக்குவம் இல்லை ஐயா.

  ReplyDelete
 5. உள்ளத்தை உருக வைக்கும்
  உண்மை வரிகள்...
  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 6. வாழ்க்கையை வாழ்ந்துதான் கழிக்கவேண்டும். கால(ன்)ம் வரும். காத்திருப்போம்.

  ReplyDelete
 7. ஐயா!

  முதலில் இங்கு பகிர வேண்டாம் என்று நினைத்தேன். எனினும் உங்கள் கவிதைகளைக் கண்டதும் இதே போன்று 2002 இல் எங்களை விட்டுப் பிரிந்த என் தாயைப் பற்றி என் தந்தை எழுதிய புத்தகத்தில் உள்ள சில வரிகளை இங்கு பகிர்கிறேன்.

  அம்மா பெயர் ஹேமலதா. அப்பா எழுதியுள்ள அல்லது புலம்பியுள்ள புத்தகத்தின் பெயர் ஹேமாஞ்சலி.

  அதிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு...


  மானுடம் தோற்பது தெய்வத்தின் வெற்றியா?
  மனசு இருள்வது ஆன்மீக வெளிச்சமா?
  பாவம், புண்ணியமும் சொர்க்கம் நரகமும்
  பாழ்மனக் காரரின் கற்பனை மட்டுமா?

  ஆடி ஓடிக் களைத்ததனால்
  அயர்ந்துபோய்த் துவண்டாயோ?
  கூடி வாழ்ந்தது போதுமென்று
  கூடு நீக்கிப் பறந்தாயோ?
  தேடி வந்து வாழ்வித்த - என்
  தெய்வதமே எங்குற்றாய்? - உனைத்
  தேடிநான் வரும்வரையில் - என்
  தேவதையே காத்திரம்மா...

  கடைசி இருநாள் மட்டும் என்னைப் பார்த்து
  கண்மலங்க வாய்குழறி உதிர்த்த சொற்கள் :
  "வீட்டுக்குப் போய்விடுவோம்" - "வீட்டுக்குப் போய்விடுவோம்"

  ஐம்பத்தோராண்டு எம் தாம்பத்தியத்தில்
  எப்போதும் எதுவும் அவள் கேட்டதில்லை
  இப்போது கேட்பதுவோ என்னால் முடியவில்லை
  நப்பாசை - 'மருத்துவம் நல்லது செய்திடாதா?'
  மனம் அழுது, முகம் சிரித்து, "போவோம்" என்பேன்.
  மறுபடியும் மறுபடியும் அதையே கேட்பாள் -
  வீட்டுக்கு வீட்டுக்கு என்றவளைப் - பாவி
  காட்டுக்கே கடைசியில் கொண்டு சேர்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ஸ்ரீராம் அவர்களது தாயாருக்கு அவரது தந்தை எழுதிய ’ஹேமாஞ்சலி’ உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது. கவிதையில் உள்ள

   // ஐம்பத்தோராண்டு எம் தாம்பத்தியத்தில்
   எப்போதும் எதுவும் அவள் கேட்டதில்லை//

   என்ற வரிகள் என்னை உலுக்கி விட்டன. அண்மையில் இறந்த என் அம்மாவும் கடைசிவரை என் அப்பாவிடமோ. என்னிடமோ எதுவும் கேட்டதில்லை. ஸ்ரீராம் அவர்கள் இந்த கவிதையை இன்னும் நிறைய தகவல்களோடு தமது வலைப்பதிவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

   Delete
 8. கண்ணீரால் எழுதப் பட்ட கவிதாஞ்சலி மனதிற்கு வலிமையை ஊட்டட்டும் !

  ReplyDelete
 9. தங்கள் துணைவியாருக்கு தாங்கள் செலுத்தும் கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன் அய்யா. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

  ReplyDelete
 10. துணைவியாருக்கு தாங்கள் வடித்த கவிதை மனதை ஏதோசெய்கிறது ஐயா. ஆறுதல் எப்படி சொல்வது என தெரியவில்லை.

  ReplyDelete
 11. தங்களின் அழகான கவிதைகளால் எங்களைக் கட்டிப் போடும் தாங்கள் இந்த கவிதை மூலமாக கண்ணீர் வரவழைத்துவிட்டீர்கள். இவ்வாறான பதிவு தங்களின் மனச்சுமையை குறைக்கும் என நம்புகிறேன். இருப்பினும் இவ்வாறான ஈடு செய்யமுடியா இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன்.

  ReplyDelete
 12. கையறுநிலைக் கவிதையில் வேதனையின் குரல் சுடுகிறது ஐயா!
  மனம் கனக்கிறது.
  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 13. நெகிழ்ச்சி இதைப்படிக்கும் கணவர்கள் நிச்சயம் மனைவியை நினைப்பார்கள்

  ReplyDelete
 14. வணக்கம்
  ஐயா
  தங்களின் மனைவி மீது வைத்துள்ள பாசத்தை நன்கு அறிவேன் ஐயா கவிவழி.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...