Showing posts with label புதுக்கோட்டை பதிவர்கள் விழா சந்திப்பு அழைப்பு கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை பதிவர்கள் விழா சந்திப்பு அழைப்பு கவிதை. Show all posts

Wednesday, September 30, 2015

கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்


கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை
கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்
ஏட்டில் வாராச் செய்திகளும் முந்தித் தருவார்–அன்னார்
இணையத்தில் நாள்தோறும் பதிவில் வருவார்!
நாட்டை நாளும் நல்வழியில் நடத்திச் செல்லவே- உரிய
நற்கருத்தை அழுத்தமாக நெஞ்சில் கொள்ளவே
ஊட்டமான சத்துணவாம் பதிவர் ஆகுமே –என்றே
உணர்ந்தாலே போதுமுடன் தீமை போகுமே!


கைமாறு கருதாமல் தெண்டு செய்யவே–நேரம்
கருதால் கடமையென உலகம் உய்யவே
பெய்மாரி போன்றுமவர் பணியே ஆற்றுவார்-தம்மை
போற்றினாலும் தூற்றினாலும் கருத்தை சாற்றுவார்
பைமாரி ஊடகங்கள் கொடுக்கும் செய்தியே –கண்டு
பரிதாபம் மக்களவர் குழப்பம் எய்தவே
உய்மாறு உண்மைகள் உரைக்கும் இவரே –ஐயா
உலகத்தில் சொல்லுங்கள் உண்டா? எவரே!

கூடுங்கள் ! பதிவர்களே அனைவருமே ஒன்றாய் –நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே நன்றாய்
தேடுங்கள் பதிவருக்கோர் பாது காப்பே –உடன்
தேவையது சங்கத்தின் பதிவுதான்! இப்போ
நாடுங்கள் ஏற்றவழி தன்னை நன்றே-கால்கோள்
நடக்கட்டும்! அமையட்டும் திருநாளாம் அன்றே
போடுங்கள் உண்மைகளை உலகறிய என்றும் –நன்கு
புடமிட்ட பென்னெனவே வாழ்த்தட்டும் நன்றும்!

தங்கமது செய்யாத நன்மைகளைக் கூட –ஏதும்
தடையின்றி தேடிவந்து நம்மிடமே நாட
சங்கமென ஒன்றிருந்தால் ஆகும் என்றே-முன்னே
சான்றோர்கள் சாற்றியதை அறிவோம் நன்றே
பொங்கிவரும் அலைபோல புதுக்கோட்டை வந்தே –முதிய
புலவனிவன் வேண்டுகோளை நிறைவேற்றி தந்தே
எங்குமுள நம்தமிழர் வாழ்த்தவழி காண்போம் –வலிமை
ஏற்றமுற சங்கமென உறுதிமொழிப் பூண்போம்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...