Saturday, January 16, 2016

திருவள்ளுவர் திருநாள் !


திருவள்ளுவர் திருநாள் !

தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்


சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

16 comments :

  1. ஆஹா.... உலகப் பொதுமறை குறித்து திருவள்ளுவர் தினத்தில் அருமையான கவிதை ஐயா....

    ReplyDelete
  2. திருவள்ளுவர் திருநாளாம்
    இந்நன்னாளில் திருவள்ளுவரைப் போற்றுவோம்
    வள்ளுவம் வழி நடப்போம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  3. உங்கள் குரலில் குறளைச் செவிமடுத்தல் இன்பம்.

    தொடர்கிறேன் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  4. அருமை ஐயா திருவள்ளுவர் தினத்தில் உங்கள் வரிகளில் திருக்குறளை பற்றி...

    வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  5. #உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் #
    வந்தாலும் மூல மொழியான தமிழ்க்குறள் போலாகுமா ?இது நாம் பெற்ற பேறு!

    ReplyDelete
  6. திருவள்ளுவரைப் போற்றும் அழகான கவிதை ஆழப்பதிந்தது.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா, ஐயன் வள்ளுவனைக் குறித்த கவிதை அருமை ஒரு சந்தோசமான செய்தி ஐயா சமீபத்தில் சவூதி அரேபியாவில் திருக்குறளை அரபு மொழியில் வெளியிட்டு இருக்கின்றார்கள் விரைவில் இதனைக்குறித்து எழுதுகிறேன்.
    தமிழ் மணம் 7

    ReplyDelete
  8. வள்ளுவர் நாளில் நெஞ்சை அள்ளும் கவிதை

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...