Thursday, November 9, 2017

நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!



நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கா இல்லை  மேலும்

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குனிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. புலவர் அய்யா அவர்களே, நாம் என்னதான் அழுது புலம்பினாலும் சம்பந்தப்பட்டவர்கள் காதில் ஏறப் போவதில்லை. காலம்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. எந்த ஆட்சியாளரும் திருந்தப் போவதில்லை.

    ReplyDelete
  3. எழுதியாவது நமது ஆதங்கத்தை தீர்ப்போம் ஐயா
    த.ம.நாளை.

    ReplyDelete
  4. ஆதங்கம் மட்டுமே மிச்ச்சம்.

    ReplyDelete
  5. இந்த அரசியல் பிரச்சனை என்றுதான் தீருமோ?:)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...