Friday, December 1, 2017

பட்டே அறிவது பட்டறிவு-எதையும் பகுத்து அறிவதும் பகுத்தறிவே



பட்டே அறிவது பட்டறிவு-எதையும்
   பகுத்து அறிவதும் பகுத்தறிவே !
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
  தொட்டு அறிவது  பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாமும்
  விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
   கெட்டோம் அறிவது பகுத்தறிவு

ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-தந்திடும்
   அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதையும்
   மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-நாளும்
   வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
   உணரின் வாழ்வீர் நலம்பெற்றே

சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவரே
    சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதையும்
     சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
     எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-எதையும்
     எண்ணாமல் என்றும் கூறாதீர்

சித்தர் பாடல் பட்டறிவாம் -முன்னோர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவரின்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-சுதந்திர
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-ஆமென
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!

                  புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. அருமை ஐயா அற்புதமான வார்த்தைக்கோர்வை மிகவும் இரசித்து, மீண்டும் மீண்டும் படித்தேன். நன்றி

    த.ம.பிறகு

    ReplyDelete
  2. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...

    ReplyDelete
  3. மிகவும் அருமை ஐயா

    ReplyDelete
  4. பட்டே அறிவது பட்டறிவு. ரசித்தோம் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...