Showing posts with label ஈகோ மக்கள். Show all posts
Showing posts with label ஈகோ மக்கள். Show all posts

Thursday, December 13, 2012

எத்தனை நாட்கள் பொறுப்பார்கள் –எனில் என்றுமே உம்மை வெறுப்பார்கள்!




பதிவர்கள்  பலபேர்  எழுதவில்லை தினம்
    பவர்கட்  ஆவதா  தெரியவில்லை!
இதுவரை  தீர்த்திட  முயலவில்லை மின்
    இணைப்பினை  நம்பிப்  பயனில்லை!
எதுவரை  இந்நிலை!  தெரியவில்லை மாற்று
      எதுவென  ஏதும்  புரியவில்லை!
விதியென  கிடப்பதே  நம்நிலையா இருள்
      விலகிட  ஒளிவர   வழியிலையா!

முற்றும்  முடங்கின  தொழில்   கூடம் பூட்டி
    மூடிட  கண்ணீர்  வழிந்தோடும்!
வற்றின  நீர்நிலை  மழையில்லை இரவு
    வந்தால்  கொசுவோ பெருந்தொல்லை!
பற்றின  துயரோ  தீயாக நோய்
    பற்றிட , தொற்றிட  பேயாக!
பெற்றனர்  நாளும்  துன்பந்தான் இனிப்
   பெருவரோ?  வாழ்வில்  இன்பந்தான்!

கடிதம்  எழுதி  வருவதில்லை !நேரில்
    கண்டுப்   பேசிடின்  தீரும்தொல்லை!
அடிமேல்  அடியும்  அடித்தாலே பெரும்
    அம்மியும்  நகரும் அதுபோலே!
துடியாய நேரில்  போவீரே மெகா
    தொடர்கதை  மின்வெட்டை  முடிப்பீரே!
முடியா  நிலையென  ஏதுமிலை மேலும்
    மௌனம்  காப்பது  நீதியிலை!

மத்திய  மாநில  அரசுகளே ஈகோ
     மனதை  விடுவீர்  அரசுகளே!
நித்தம்  மக்கள்  படும்பாடே மேலும்
     நீண்டால்  அடைவீர்  பெரும்கேடே!
சித்தம்  இரங்கிட  வேண்டுகிறேன் உடன்
     செயல்பட  உம்மைத்   தூண்டுகிறேன்!
எத்தனை  நாட்கள்  பொறுப்பார்கள் எனில்
     என்றுமே  உம்மை  வெறுப்பார்கள்!

                     புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...