கட்டிளம் காளை யொருவன்
கன்னியாம்
பெண்ணு மொருத்தி
விட்டனர்
உயிரை என்ற
வேதனை
செய்தி கேட்டே
பட்டது துயரம் !
பஞ்சில்
பற்றிய தீயாய்
நெஞ்சில்
எட்டுமா ? துரோகி
உமக்கே
ஈழமும் மலர
எமக்கே!
தற்கொலை
வேண்டா மிங்கே
தன்னலம்
மிக்கோ ரிங்கே
அற்பனாம் பக்சே
தனக்கே
அடிமையாய் ஆன கணக்கே
சொற்பநாள் விரைவில்
முடியும்
சுதந்திர ஈழம்
விடியும்
பொற்பனை உயிரை
இனியும்
போக்காதீர் காலம்
கனியும்
கோழையா? அல்ல! நாமே
கொள்கையில் உறுதி தாமே!
ஏழைகள் வடித்த கண்ணீர்
எரிந்திடும் தீயாய் ஆமே
பேழையுள் பாம்பா !
அல்ல
பிணைத்திட தாம்பு மல்ல
தாழையுள் நாக மென்றே
தனியீழம் பெறுவோம்
நன்றே!
புலவர் சா இராமாநுசம்

