Sunday, May 18, 2014

தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே!



மேதினி போற்றும் மேதினமே-உன்
மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே!
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக!
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்!

உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
அமைதியாய் நெஞ்சில் துயரேந்தி!
வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
வருந்த மக்கள் வழியெங்கும்!
திலகம் வீரத் திலகமவர்-உயிர்
துறந்த தியாக மறவர்!

முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
முடிந்த கதையா அதுவல்ல!
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
குடும்பமே அழிந்த நாளன்றோ!?
புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
புகன்றதே நாற்பது ஆயிரமே!
உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
உலகத் தமிழர் தொழுகின்றார்!

அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
அறிந்தும் அமைதியா-? மடமையதே!
வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
வீரம் விளையாக் களர்நிலமே!
நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
நம்தலை தாழும் நிலையுண்டே!
தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

புலவர் சா இராமாநுசம்

Friday, May 16, 2014

வந்தது தேர்தல் முடிவேதான்- இனி வருமா நமக்கே விடிவேதான்!



வந்தது தேர்தல் முடிவேதான்- இனி
வருமா நமக்கே விடிவேதான்! -இதுவரை
நொந்தது போதும் என்றேதான் –மனம்
நோகா திருக்க நன்றேதான் –மத்தியில்,
தந்தனர் ஐயா பெரும்பான்மை! ! –ஊழல்
தடுப்பீர் ! காப்பீர் ! சிறுபான்மை! –தேர்தல்,
சந்தையில் ,விற்பதா !? குடியரசு - இங்கே
சனநாயகம் இன்றெனில் முடியரசே

எண்ணியே நாளும் ஆளுங்கள்- மக்கள்
இன்னல் எதுவென கேளுங்கள் -செயலில்,
புண்ணிய பாபம் பாருங்கள் –ஏழை
புலம்பலை முதலில் தீருங்கள் -அவர்,
கண்ணில் வடித்திட நீரில்லை –அந்தோ
கண்டதோ தினமும் துயரெல்லை- இம்
மண்ணை நம்பிய உழவன்தான் –இன்று
மண்ணொடு மண்ணாய்ப் போனான்தான்

ஆலையில் வேலையும் ஏதுமில்லை- கொத்து
அடிமை முறையும் ஒயவில்லை- மக்கள்
சாலையே வாழும் இடமாக –கட்சி
சண்டையால் ஆண்டி மடமாக –இனியும்-
நாளைக் கடத்துமா மக்களவை – எதிர்
நாளில் காட்டும் காலமவை – இளையோர்
வேலை வாய்ப்புகள் பெருகட்டும் - வீண்
விதண்டா வாதங்கள் கருகட்டும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 14, 2014

இருப்பது இடையில் ஒருநாளே – பதவி ஏற்பவர் தெரியும் மறுநாளே!





இருப்பது  இடையில்  ஒருநாளே – பதவி
   ஏற்பவர்  தெரியும்  மறுநாளே!
பொறுப்பொடு  செயல்பட  வேண்டுமே –கடந்து
   போனதை  தோண்டிட  வேண்டாமே!
விருப்பு வெறுப்பு  இல்லாமல் –யாரும்
   வேதனைப்  படும்படி  சொல்லாமல்!
சிறப்பொடு நேர்மையாய்  செயல்படுவீர்- என
   செப்பிட  மக்கள்   முற்படுவீர்!

வென்றவர்  தோற்றவர்  இருவீரும் –தம்
   வேற்றுமை  மறந்து  ஒருவீராய்!
நின்றெவர்  வரினும்  பொதுநலமே –என்றும்
   நிலையன  துளியும்  சுயநலமே!
இன்றென  பதவி  ஏற்பீராம் -ஆட்சி
   இனித்திட! மக்களைக்  காப்பீராம்!
நன்றென மக்கள் வாழ்த்தட்டும் – இந்த
   நாட்டை மகிழ்ச்சியில்  ஆழ்த்தட்டும்!

புலவர்  சா  இராமாநுசம்
  

Monday, May 12, 2014

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த முரடர்கள் செயலால் முடங்கட்டும்!





எழுவாய்த்  தமிழா  எழுவாயா-அணையை
     இழந்த   பின்னர்  அழுவாயா!
வழுவாய்ச்  சொல்லியே  துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட  பொய்பல  தொடுக்கின்றார்!
தொழுவாய்  எதற்கு  வடநாடே-அவர்
    துணையால்  நடப்பதே  இக்கேடே!
கழுவாய்  எதிர்ப்புப்  போராட்டம்- இங்கே
     கண்டவர்  புத்தி  மாறட்டும்

முல்லைப்  பெரியார்  அணைமட்டும்-அந்த
     முரடர்கள்   செயலால்  முடங்கட்டும்!
எல்லைப்  போரே  நடந்திடுமே-நம்
    ஏக  இந்தியா  உடைந்திடுமே
தொல்லை மத்தியில்  எவர்வரினும்-உடன்
     தொடுப்போம் அறப்போர்  துயர்தரினும்
இல்லை  என்றால்  பெருந்தீங்கே இங்கு,
     ஏற்படும்!  தீர்ப்பால்!  பயனெங்கே

திட்டம்  இட்டே   செய்கின்றார்-அவர்
    தினமும்  பொய்மழை   பெய்கின்றார்
கொட்டம்  இனிமேல்  செல்லாதே-தமிழன்
    குமுறும்  எரிமலை!  பொல்லாதே!
சட்டம்  நமக்கே சாதகமாய்- தீர்ப்பு
     சரியென  வந்தும்  பாதகமாய்
பட்டே  அறிவும் வரவில்லை!   -இதுவே
     பண்பா ?  பகையா!? தெரியவில்லை!


அனைவரும்  ஒன்றாய்  சேருகின்றார்-நம்
     அணையை  உடைக்கக்  கோறுகின்றார்
இனியென  தமிழகம்  திரளட்டும்-நம்
      எழுச்சியை  உலகம்  உணரட்டும்
தனியொரு  புதுயுகம்  தோன்றட்டும்-பின்
      தக்கதோர்  பாடம்  கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில்  நோயே  உற்றவர்கள்

உதிரிப்  பூவாய்  கட்சிகளே-இங்கே
    உள்ளது  சரியா  கட்சிகளே
எதிரிகள்  அனைவரும்  ஒன்றாக-அங்கே
    இருப்பதைக்  காண்பீர்  நன்றாக
சதிபல  அன்னவர்  செய்கின்றார்-ஏற்ற
    சமயம்  இதுவென  முயல்கின்றார்
மதிமிகு  தமிழா  எழுவாயாநம்
    மானத்தை  உரிமையைக்  காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்

Sunday, May 11, 2014

அன்னையர் தினம்



  அன்னையர்  தினம்

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும்  நினைந்தீரா  சுமையாய்! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

Thursday, May 8, 2014

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என் இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!



இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என்
இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!
அன்றெந்தன் கைபிடித்து வந்த முதலாய் – பெற்ற
அன்னையாய், தாரமாய் இரவு பகலாய்!
நன்றென்னை காத்தவளேன் விட்டுப் போனாய் –எனக்கு
நன்றென்றா! ஐயகோ! சாம்பல் ஆனாய்!
கொன்றென்னை கூறுபோட தனிமை உலகம் –நாளும்
கோமகளே நீதானென் வாழ்வின் திலகம்!

மருத்துவத்தில் நீபடித்து பட்டம் பெற்றாய் –நான்
மாத்தமிழைக் கற்றதிலே மகிழ்வே உற்றாய்!
பொருத்தமுண்டா எனச்சிலரும் கேட்ட போதும் –முறுவல்
பூத்திட்ட உன்முகமே கண்ணில் மோதும்!
திருத்தமுற மகவிரண்டும் பெற்றோம் நாமே-வாழ்வில்
தேடியநல் செல்வமென வளர ஆமே!
வருத்தமற உன்நினைவே கவிதை வடிவில் –வலம்
வருகின்றாய்! வாழ்கின்றாய்! உலகில்! முடிவில்!

இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் –நான்
இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன்
உருக்கமிகு உறவுகளே உலகில் எங்கும் -இன்று
உள்ளார்கள்! முகமறியேன்! உணர்வில் பொங்கும்!
நெருக்கமிகு , அவரன்பில் ,இன்பம் கொண்டேன்!- அதுவே
நீயில்லாத் துயரத்தைத் தணிக்கக் கண்டேன்!
ஆனால்,…..?
அருத்தமில்லை ! நீயின்றி வாழ்தல் நன்றா!- கேள்வி
ஆழ்மனதில் எழுகிறதே! தீரும் ஒன்றா!

புலவர் சா இராமாநுசம்

Monday, May 5, 2014

ஆள்வோரும் ஆண்டோரும் மாறிமாறி –தினம் அறிக்கைகளை விடுவதா இன்று தேவை!





ஆள்வோரும் ஆண்டோரும்  மாறிமாறி –தினம்
   அறிக்கைகளை விடுவதாஇன்று  தேவை!
மாள்வாரோ! மேன்மேலும் குண்டும் வெடிக்க –இதுவா
    மக்களுக்கு நாம்நாளும் செய்யும்  சேவை!
தோளோடு  தோள்சேர  ஒன்று  படுவோம் – இதுவே
   தொடர்கதை  ஆனாலே  முற்றும்  கெடுவோம்!
வாள்மீது நடப்பதாம்! இன்றை  நிலையே –மக்கள்
   வாழ்வுக்கு அணுவளவும் காப்பு  இலையே!

சாதிமதம்  கட்சியென  பேதம்  இன்றி –தமிழ்
   சமுதாயம் ஒன்றெனவே  நம்முள் ஒன்றி
பீதியின்றி நடமாட மக்கள்  எங்கும் –வீண்
   பேச்சுகளை தவிர்ப்பீரே! பகமை  மங்கும்!
மேதினியில் தமிழ்நாட்டின் மேன்மை  ஒங்க –இனி
   மேலுமிங்கே வெடிக்காமல் அச்சம்  நீங்க!
வீதிதோறும்  பாதுகாப்பு குழுக்கள்  வேண்டும்- மத
   வெறியர்களை வேரோடு அழிப்போம் யாண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...