Saturday, June 25, 2011

ஏற்றிய மெழுகின் எரியுடன் இன்றே

  வருவாய் தழிழா வருவாய் நீயே
  சீரணி அரங்கம் மெரினா நோக்கி
  வருவாய் தழிழா வருவாய் நீயே
  பேரணி  யாக நீரணி வகுத்து
  எரியும் மெழுகு வத்தியை ஏந்தி
  தேதியும் இருபத்தி ஆறா மின்றே
  நீதியில் உலகும் அறிந்திட நன்றே
  வருவாய் தழிழா வருவாய் நீயே

  தன்னுயிர் ஈந்த ஈழரின் நினைவாய்
  தமிழகம் இழந்த மீனவர் நினைவாய்
  அஞ்சலி சொய்ய அனைவரும் வாரீர்
  வஞ்சக சிங்களர் வடமட கையர்
  கொஞ்மும் இரக்கம் இல்லாக் கொடியர்
  நெஞ்சமும் அஞ்சவர் நிம்மதி குலைய
  அலைகடல் ஒரம் அலையென திரண்டு
  வருவாய் தழிழா வருவாய் நீயே

   நீந்தும் தூரம் ஈழ மிருந்தும்
   நீதியில் கொலைகள் நடப்பன அறிந்தும்
   ஏதிலியாக இருந் தவர் நாமே
   இறந்தோர் தமக்கு அஞ்சலி தாமே
   செய்திட அணியென சேர்வோம் ஆமே
   கையில் ஊமையன் கதையாய்க் காலம்
   கடந்ததை மாற்றி போற்றிட ஞாலம்
   வருவாய் தமிழா வருவாய் நீயே

   எஞ்சிய ஈழரும் இன்னமும் அங்கே
   அஞ்சியே வாழின் நிம்மதி எங்கே
   அச்சம் தவிர்ப்போம் ஆணவம் அழிப்போம்
   துச்சம் என்றே துரத்தி ஒழிப்போம்
   ஒற்றுமை என்றே ஓரணி நின்றே
   பெற்றிட வேண்டும் ஈழமும் நன்றே
   ஏற்றிய மெழுகின் எரியுடன் இன்றே
   வருவாய் தமிழா வருவாய் நீயே

                                      புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. //வருவாய் தமிழா வருவாய் நீயே//

    அனைத்தும் உத்வேகம் கொடுக்கும் உன்னத வரிகள் !

    அலைகடலென திரண்டு வாரீர் தமிழர்களே.......

    ReplyDelete
  2. ஐயா அனைத்தும் எழுச்சி தரக்கூடியதும்
    ஆற்றாமையை வெளிப்படுத்தியதுமான அற்புதமான வரிகள்....
    பிரமாதம்

    ReplyDelete
  3. தன்னுயிர் ஈந்த ஈழரின் நினைவாய்
    தமிழகம் இழந்த மீனவர் நினைவாய்

    நெஞ்சு கனக்கும் வரிகள் ஐயா

    ReplyDelete
  4. நீந்தும் தூரம் ஈழ மிருந்தும்
    நீதியில் கொலைகள் நடப்பன அறிந்தும்

    கண்கள் கனக்கிறது
    இந்தியாவுடன்
    சாகடிக்கும் போது தான் வரவில்லை சரி
    எண்டா எண்ட சாவு வீட்டுக்கு கூட நீ வரவில்லை என்று உரிமையுடன் சண்டை போட தோன்றுகின்றது

    ReplyDelete
  5. எஞ்சிய ஈழரும் இன்னமும் அங்கே
    அஞ்சியே வாழின் நிம்மதி எங்கே

    அனுபவிக்கிறோம் இன்னமும்

    ReplyDelete
  6. ஈனவன் சிங்களன் இங்குக் கடலாடும்
    மீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
    இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
    குந்தி இருத்தல் கொடிது!

    ReplyDelete
  7. ஈழத்தமிழர்களில் இன்னல்களை எடுத்துரைத்து அனைத்துத் தமிழர்களும் அறியும் வண்ணம் அழகாக இயற்றப்பட்டுள்ள அருமையான கவிதை.

    மெழுகுவர்த்திகள் நன்கு சுடர் விட்டு எறிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வெளி மாவட்டத்தில் இருந்தாலும்
    எங்கள் நினைவுகள் எல்லாம்
    சென்னையில் இந்த நிகழ்வை நினைத்தே இருக்கும்
    நெகிழ்ச்சியான கவிதை
    கவிதையை படித்த சென்னைவாசி எவரும்
    நிச்சயம் வாராது இருக்க மாட்டர்கள்

    ReplyDelete
  9. உங்கள் இன உணர்வுக்கும் மன உணர்வுக்கும் நன்றி ஐயா.இந்தவார்த்தை தேவையில்லை
    என்றாலும் வேறு வார்த்தை என்னிடம் இல்லை !

    ReplyDelete
  10. உணர்வெழுச்சியோடு, மக்களிற்கு விழிப்புணர்வினையும் கொடுத்து, அஞ்சலி நிகழ்விற்கு வருகை தரச் சொல்லும் அறை கூவற் கவிதை அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  11. அனைவருக்கும்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...