Saturday, July 2, 2011

ஈழ வளமையை மீண்டும் தருவாயா

        எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
            இதயம் விம்ம அழுதேனே
        அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
            அலறிய சேனலை நோக்கிலையா
        விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
            வெறியொடு எங்கும் திரிந்தானே
        தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
              துயரை நீக்கித் தருவாயா

        நாதியும்  அற்றுப் போனானே-தனக்கோர்
             நாடும்  அற்றுப் போனானே
        பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
            பெற்றால் உனக்கோர் திருநாளாம்
        வீதி உலாவும்  வருவாயே-எம்
           வேண்டுதல் நடத்தி தருவாயே
        நீதி இல்லா  உலகமிது –துளியும்
           நேர்மை யில்லா உலகமிது


        உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
            உனக்குமா கருணை விழியில்லை
        பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
             பொருளை நாங்கள் கேட்கவில்லை
        அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
            ஆண்டால் தானே வளம்சூழும்
        மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
            மண்ணில் உயிரை விடமாட்டோம்

        எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
             இருந்தும் என்ன பயன்கண்டோம்
        சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
              செய்வாய் அருள்வாய் விரைவாநீ
        எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
             இனவெறி மொழிவெறி கொடியர்களே
         புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
             போதனைக் ஏற்கும நாடில்லை


          வருவாய்  இறைவா  வருவாயா-ஈழ
             வளமையை  மீண்டும்  தருவாயா
          திருவாய்  திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
             தீயோர் செய்தார்  படுநாசம்
         ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
             ஓரம்தானே அவர் எல்லை
         கருவாய்  உருவாய் அழிந்தாரே-உலகம்
            காணவும் கண்ணீர் பொழிந்தாரே
                                                புலவர் சா இராமாநுசம்

                                                              

                                                       
 

13 comments :

  1. ஜப்பான் போல மீண்டும் உயிர்த்தெழ பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. வருவாய் இறைவா வருவாயா-ஈழ
    வளமையை மீண்டும் தருவாயா//

    வளம் பெற் வாழ்த்தும் கவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே

    இராமாநுசம்

    ReplyDelete
  4. அசத்தலான கவிதைக்கு நன்றி தோழரே..

    ReplyDelete
  5. நன்றி
    வேடந்தாங்கல் அவர்களே
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மனதில் வடுக்களாக உள்ள சோகங்களை
    உங்களின் செந்தமிழால்
    வார்த்தைகளாக செதுக்கிய விதம்
    கம்பீரம் ஐயா

    ReplyDelete
  7. நன்றி சகே
    உங்கைப்போன்ற அன்பு நெஞ்சங்களின்

    பின்னூட்டங்களே என்னை வழி நடத்தி வருகின்றன
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. நம்பிக்கைதான் வாழ்வாகிறது ஐயா.அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அதே அழுத்தத்தில் இன்னொரு தலைவன் உருவாகமலா போகப்போகிறான்.ஆனால் காலம் எடுக்கும் !

    ReplyDelete
  9. நன்றி ஹேமா அவர்களே
    நேற்று நண்பர் ஒருவர் வந்தார் அவரும்
    சேனல் நான்கினைப் பார்க்க விரும்ப
    போட்டுக்காட்டினேன்
    பாதியிலேயே, பார்க்க இயலாமல்
    நிறுத்தச் சொல்லி, கண்கலங்கி ஆண்டவன்
    தான் காப்பாற்ற வேண்டு மென்றார்

    கண்கலங்கிய நானும் இக் கவிதையை
    எழுதினேன் நம்பிக்கை தளரும் போது
    மனம் இறைவனைத் தானே வேண்டு
    கிறது

    இராமாநுசம்

    ReplyDelete
  10. நன்றி
    செந்தில்குமார் அவர்களே

    இராமாநுசம்

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா, இழந்து போன எம் வளமான வாழ்வு,
    மீண்டும் புதுப் பொலிவுடன் கிடைக்க வேண்டுமென விருத்தத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்துள்ளீர்கள்.

    நம்பிக்கையோடு காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் அறிகிலேன் யான்.

    ReplyDelete
  12. நெஞ்சில் வருத்தம் பாவில் விருத்தம்
    எஞ்சிய நிலையை எழுதினீர் பொருத்தம்
    அஞ்சியே மனமும் ஆண்டவன் திருவடி
    ஆதர வென்றே தாங்கினேன் என்முடி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...